ஆண்பாவம் பொல்லாதது
  தயாரிப்பு : டிரம் ஸ்டிக் புரடக் ஷன்
இயக்கம் : கலையரசன் தங்கவேல்
நடிப்பு : ரியோராஜ், மாளவிகா மனோஜ், விக்னேஷ்காந்த், ஷீலா, ஜென்சன் திவாகர்
இசை : சித்துகுமார்
ஒளிப்பதிவு : மாதேஷ் மாணிக்கம்.
வெளியான தேதி : அக்டோபர் 31, 2025
நேரம் : 2 மணிநேரம் 02 நிமிடம்
ரேட்டிங் : 3.25 / 5
சென்னையில் ஐ.டியில் வேலை பார்க்கும் ரியோ ராஜ்க்கும், கோவையை சேர்ந்த மார்டன் பெண் மாளவிகா மனோஜ்க்கும் திருமணம் நடக்கிறது. சில மாதங்கள் சந்தோஷமாக செல்லும் இவர்களின் தனிக்குடித்தன வாழ்க்கையில், ஒரு கட்டத்தில் புயல் அடிக்கிறது. இரண்டு பேரும்  ஈகோ பிரச்னையால் சண்டைப்போட்டு விவாகரத்து வரை செல்கிறார்கள். ஏற்கனவே, விவாகரத்து பெற்ற வக்கீல்களான விக்னேஷ்காந்த்தும், ஷீலாவும் இவர்களுக்காக  வாதாடுகிறார்கள். விவாகரத்து கிடைத்ததா? இல்லையா?  இதுதான்  புதுமுக இயக்குனர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஆண்பாவம் பொல்லாதது கதை.
ஐடி ஊழியராக, ஆரம்பத்தில் புது மனைவியை கொஞ்சுபவராக, பின்னர் அவருடன் சண்டைபோடுபவராக, விவகாரத்து வழக்கில் சிக்கி கோர்ட்டில் தவிப்பவராக 'தேர்ந்த' நடிப்பை தந்து இருக்கிறார் ரியோராஜ். இதற்கு முன்பு பல  படங்களில் நடித்து இருந்தாலும், இந்த பட கேரக்டர், நடிப்பு, அவரின் கோபம், மனைவி பாசம் ஆகியவை  ரியோவை  கவனிக்க வைக்கிறது. ரீல்ஸ் விஷயத்தில், வீட்டில் வேலை செய்யும் சண்டையில், குடும்ப பிரச்னையில் 'ஆண்களுக்கு'ஆதரவாக அவர் பேசும் வசனங்கள், அடிபட்ட பல  ஆண்களின் அடிமனதில் இருந்து நன்றி சொல்ல வைக்கிறது. என் இனமடா நீ என பெருமை கொள்ள வைக்கிறது.
தம் அடிப்பராக, பீர் குடிப்பவராக, தாலியை கழட்டி வைத்துக் கொள்ளும் பகுத்தறிவு பெண்ணாக வருகிறார் மாளவிகா. அவரின் ரீல்ஸ் மோகம், கணவருடன் சண்டை போடும் சீன்கள் படத்தை விறுவிறுப்பாக்குகிறது. என்ன, இடைவேளைக்குபின் அவர் நடிப்பும், கேரக்டரும் டம்மி ஆக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் அவரை புத்திசாலி பெண்ணாக, புரட்சி சிந்தனை கொண்டவராக காட்டிவிட்டு, கடைசியில் அந்த கேரக்டரை சராசரி பெண்ணாக்கி இருக்கிறார் இயக்குனர் (என்னவொரு ஆணாதிக்க சிந்தனை).
இவர்களை தவிர, ரியோவுக்கு ஆதரவாக வாதாடும் விக்னேஷ்காந்த், மாளவிகாவுக்கு ஆதரவாக களம் இறங்கும் வக்கீல் ஷீலா நடிப்பு, 'பிரிந்த' அவர்களுக்கு இடையேயான போட்டி, கோர்ட் வாதம் பிரஷ் ஆக இருக்கிறது. விக்னேஷ்காந்த் ஜூனியர் வக்கீலாக வரும் ஜென்சன் திவாகர் பல சீன்களில் ஸ்கோர் செய்து, கைதட்டி சிரிக்க வைக்கிறார். அவரின் அப்பாவிதன நடிப்பு, கிண்டல் வசனங்கள் வெடி சிரிப்பை வரவழைக்கிறது. ஹீரோயின் அப்பாவாக வரும் இயக்குனர் ஏ.வெங்கடேஷ், ஹீரோ அம்மாவாக வருபவர், ஜட்ஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி என பல கேரக்டர்களும் மனதில் நிற்கிறது.
ஆரம்பம் முதல் கடைசிவரை படத்தில் இழையோடும் ஒரு வித கிண்டல், நக்கல், நகைச்சுவை உணர்ச்சி படத்தை பிரஷ் ஆக வைத்து இருக்கிறது. அதிலும் அவ்வப்போது வந்து விழும் வசனங்கள் வாவ்.
ஜி.யூ.போப், போர்பந்தர் டயலாக்குகள், ஜென்சன் திவாகர் அடிக்கும் கவுன்டர்கள், ரியோ, மாளவிகா கேட்கும் கோப கேள்விகள் அட, படம்  நல்லா இருக்கிறதே, நம்ம வாழ்க்கையுடன் ஒட்டுகிறதே என்று ரசிக்க வைக்கிறது. குறிப்பாக, ஆண்களுக்கு ஆதரவான சீன்கள், அவர்கள் மனசாட்சியாக ரியோ செய்யும் விஷயங்கள், பதிலுக்கு மாளவிகா கேட்கும் கேள்விகள், அவரின் கோபம்,  பிடிவாதம், குடும்ப உறுப்பினர்களின் மனநிலை ஆகியவை சினிமாத்தனம் அதிகம் இல்லாமல், இயல்பாக இருப்பதும் படத்தை  கமர்ஷியலாக்கி இருக்கிறது. கோர்ட் காட்சிகளில் கூட அதிக சீரியஸ்னஸ் இல்லாமல் , ரசிக்கும்படி கொண்டு போய் இருக்கிறார் இயக்குனர். பெண் பார்க்கும் காட்சி, போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் சீன்களில் கூட ஹியூமர் வைத்து இருப்பது பிளஸ்.
என்ன, கணவனிடம் உரிமையாக தம் கேட்கும் மனைவி, அவர் பீர் அடிக்கும் சீன், தாலியை ஒரு பொருட்டாக மதிக்காத சீன்கள் இந்த கதைக்கு தேவையா என கேட்க தோன்றுகிறது. தாலியை மதிக்க கூடாது என்று பகுத்தறிவு பேசும் சீன்கள் தமிழ் சினிமாவில் தொடர்ந்து திணிக்கப்படுவது ஏனோ? நீங்கெல்லாம், உங்க குடும்பங்களில் தாலியை இப்படி மதிக்குறீங்க என பதில் கேள்வி கேட்க தோன்றுகிறது.  ஆண்கள் பார்வையில் கதை நகர்வதால், பல இடங்களில் பெண்களின் மனநிலை, அவர்களின் கேள்விகள் அழுத்தமாக காண்பிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் மார்டன் பெண்களை, அவர்கள் சிந்தனையை வெச்சு செய்து இருக்கிறார் இயக்குனர். பெரியாரிஸம் பேசும் பெண்கள், தோழர் என அழைப்பவர்களை டோஸ்ட் போட்டு இருக்கிறார்.  இப்படிதான் கிளைமாக்ஸ் முடியும் என்று முன்பே ஏற்படும் உணர்வு, இடைவேளைக்குபின் திரைக்கதை கொஞ்சம் டல் ஆவது,  கணவன், மனைவியே இடையே கோர்ட்டில் சில எமோஷனல் சீன் செட் ஆகாததும் மைனஸ்.  
சித்துகுமாரின் பின்னணி இசை, மாலை மாற்றினால் பாடல் எனர்ஜி.  மாதேஷ் மாணிக்கத்தில் கலர்புல் காட்சிகள், கோர்ட் காட்சிகள் கவனிக்க வைக்கிறது. சிவகுமார் முருகேசன் ஸ்கிரிப்ட், வசனங்கள் ஆண்பாவத்தை இன்னும் வலுவாக, அழகாக்கி இருக்கிறது.
இளம் தம்பதிகளின் சண்டை,  விவாகரத்து பின்னணியில் பல கதைகள் வந்து இருந்தாலும், ஆண்பாவம்  ஆண்கள் பார்வையில் சொல்லப்படுவதும், அதை காமெடியாக சொல்லியிருப்பதும் படத்தை ரசிக்க  வைக்கிறது. படம் பார்க்கும்போது, படம் முடிந்தபின் தம்பதிகளுக்கு இடையில் சில கோப கேள்விகள், சண்டைகள் வரலாம். ஆனால், கடைசியில்  'சரி, விடுங்க. நீங்க திருந்தபோறது இல்லை. நமக்குள் ஈகோ வேணாம். சந்தோஷமாக இருப்போம்' என்ற தீர்வு கிடைக்கும்.
ஆண்பாவம் பொல்லாதது : ஆண்கள் மனசாட்சியை பேசும்  ஜாலி கதை, பெண்களும் பார்த்து சிரிக்கலாம்