உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / கருப்பு பல்சர்

கருப்பு பல்சர்

தயாரிப்பு : டாக்டர் முரளி கிருஷ்ணன்
இயக்கம் : முரளி கிரிஷ்.எஸ்.
நடிப்பு : அட்டக்கத்தி தினேஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சரவண சுப்பையா, மதுனிகா, மன்சூர் அலிகான்
ஒளிப்பதிவு : பாஸ்கர் ஆறுமுகம்
இசை : இன்பா
வெளியான தேதி : ஜனவரி 30, 2026
நேரம் : 1 மணிநேரம் 54 நிமிடம்
ரேட்டிங்: 2 / 5

சென்னையில் வாட்டர் பியூரிபயர் பிஸினஸ் செய்யும் அட்டக்கத்தி தினேஷுக்கும், மன்சூர் அலிகானுக்கும் தொழில் போட்டி. அந்த சமயத்தில் மதுரையில் இருந்து மன்சூர் அலிகான் வசம் வரும் கருப்பு நிற பல்சர் பைக்கின் செயல்பாடுகள் அமானுஷ்யமாக இருக்கிறது. ''என்னிடம் கருப்பு பல்சர் இருக்கிறது''
என்று காதலியிடம் பொய் சொல்லும் தினேஷ், அந்த பைக்கை மன்சூர் அலிகானிடம் இருந்து வாங்குகிறார். மீண்டும் தனது வேலையை காண்பிக்கிறது பைக். அந்த சமயத்தில் மதுரையில் இருக்கும் வில்லன் அஜய் பிரின்ஸ், அட்டக்கத்தி தினேஷை கொல்ல வருகிறார். அந்த பைக்கை அழிக்க நினைக்கிறார். உண்மையில் அந்த பைக்கில் இருக்கும் ஆவி யாருடையது?? தினேஷிற்கும் அதற்கும் என்ன தொடர்பு என்பது கருப்பு பல்சர் கதை.

சென்னை பையன், கிராமத்து மாடுபிடி வீரர் என இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார் அட்டக்கத்தி தினேஷ். அட்டக்கத்தி தினேஷ் காதல், நண்பனுடன் அடிக்கும் லுாட்டி, மன்சூர் அலிகானுடன் சண்டை என முதற்பாதி போகுது. அந்த பல்சர் கைமாறியபின் கதை ஓரளவு சூடுபிடிக்கிறது. தனி ஆளாக அந்த பைக்கை ஓட்டினால் பிரச்னை இல்லை. ஜோடியாக சென்றால் விபத்து ஏற்படுகிறது. அதற்கு காரணம், அந்த பல்சரில் ஒரு காளையின் ஆவி புகுந்து இருக்கிறது. அதற்கு ஒரு பிளாஷ்பேக் என மாறுபட்ட திரைக்கதையை சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

அட்டக்கத்தி தினேஷ் நடிப்பு, அவரின் அப்பாவிதமான பேச்சு இதெல்லாம் ஓகே. ஆனால், அவருக்கு காதல் காட்சிகள் சுத்தமாக செட்டாகவில்லை. கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகவில்லை. காதலியுடன் அவர் பேசுவது மொக்கை. அதைவிட, ப்ரண்ட் ப்ராங்க் ஸ்டாருடன் அடிக்கிற லுாட்டி, காமெடி படத்துடன் ஒட்டவே இல்லை. ஓவர் ஆக்டிங்கில், ஆர்வ கோளாறு நடிப்பில் ப்ராங்க் ஸ்டார் கடுப்பேத்தி இருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்துக்கு பெரிய மைனஸ். கிராமத்து போர்ஷனில் தினேஷ் நடிப்பு பரவாயில்லை ரகம். நல்ல கதையை ஏனோ சொதப்பி இருக்கிறார். மன்சூர்அலிகான் பெரும்பாலான சீ்ன்களில் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார் அல்லது குடிக்கிறார். ஆனாலும், அவர் போர்ஷன் கொஞ்சம் ஆறுதல். தனது அடியாட்களுடன் அவர் செய்கிற சேட்டை கொஞ்சம் சிரிக்க வைக்கிறது. வழக்கமான வில்லன், வழக்கமான அடியாட்கள், வழக்கமான சண்டை என படம் நகர்கிறது.

படத்தின் உயிரே அந்த பிளாஷ்பேக் காட்சிதான். ஒரு ஜல்லிக்கட்டில் என்ன நடக்கிறது. அதில் தோற்றவர் என்ன செய்தார். வெற்றி பெற்றவருக்கு என்ன நடந்தது என்பது முக்கியமான சீன். அதை சுமாராக எடுத்து இருக்கிறார் இயக்குனர். ஜல்லிக்கட்டு காட்சிகளில், அடுத்து நடக்கும் காட்சிகளில் உயிர் இல்லை. அதை இன்னும் உணர்வு பூர்வமாக எடுத்து இருந்தால் படம் ஓரளவு தப்பித்து இருக்கும். ஜல்லிக்கட்டி ஜாதி பிரச்னை என்பதும் அழுத்தமாக பதிவு செய்யப்படவில்லை. வில்லனாக வரும் பிரின்ஸ் அஜய் சில சீன்களில் வந்து போகிறார்.

கிளைமாக்சில் ஒரு வித்தியாசமான சண்டை, காளை மாதிரி சண்டைபோடுகிறார் தினேஷ். அது புதுசாக இருக்கிறது. அதிலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் அந்த பைட் பேசப்பட்டு இருக்கும். எதற்காக பல்சர் உறுமுகிறது. எதற்காக ஜோடிகளை கீழே தள்ளிவிடுகிறது என்பது போன்ற சீன்களில் தெளிவு இல்லை. பாடல்கள் சுமார் ரகம். ஜல்லிக்கட்டு காட்சிகள், பல்சர் சம்பந்தப்பட்ட சீன்களில் ஒளிப்பதிவு பரவாயில்லை. நகரத்து தினேஷ் காதலியாக வரும் ரேஷ்மா, கிராமத்து தினேஷ் மனைவியாக வரும் மதுனிகா காட்சிகள் ஆறுதல்.

காதல், காமெடி, ஆக் ஷன் கலந்த பேய்க்கதை கருப்பு பல்சர். ஆனால் இதில் எதுவுமே உருப்படியாக இல்லை என்பது சோகம். அட்டக்கத்தி தினேஷ் நடித்த படம் என்று நம்பி சென்றால் நிஜ 'அட்டக்கத்தி' மாதிரி அவரின் நடிப்பும், காட்சிகளும் இருக்கிறது.

கருப்பு பல்சர் - சரியாக ஸ்டார்ட் ஆகலை... ஸ்பீடாகவும் ஓடலை.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !