மெல்லிசை
தயாரிப்பு : திரவ்
இயக்கம் : திரவ்
நடிப்பு : கிஷோர், சுபத்ரா, ஜார்ஜ் மரியான், தான்யா, ஜஸ்வந்த் மணிகண்டன், தனன்யா
ஒளிப்பதிவு : தேவராஜ் புகழேந்தி
இசை : சங்கர் ரங்கராஜன்
வெளியான தேதி : ஜனவரி 30, 2026
நேரம் : 2 மணிநேரம் 06 நிமிடம்
ரேட்டிங் : 2.75 / 5
ஒரு தனியார் பள்ளியில் பி.டி.வாத்தியாராக இருக்கும் 'பொல்லாதவன்' கிஷோருக்கு இசை மீது ஆர்வம். தனியார் டிவியில் நடக்கும் பாட்டு போட்டிக்கான ரியால்டி ஷோவில் கலந்து கொண்டு, அடுத்தடுத்த நிலைக்கு முன்னேறுகிறார். அந்த பள்ளி பிரின்ஸ்பாலுக்கு இது பிடிக்கவில்லை. கிஷோரை வேலையை விட்டு நீக்குகிறார். அவருக்கு மனைவி, மகன், மகள், நண்பர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள். அந்த போட்டியில் கிஷோர் ஜெயித்தாரா? அந்த குடும்பத்துக்கு என்ன ஆனது என்பதை பாசம், பாசிட்டிவிட்டி கலந்து உணர்வுபூர்வமாக சொல்லும் படம் மெல்லிசை.
பல படங்களில் வில்லனாக, குணசித்ர வேடங்களில் நடித்த கிஷோர் இதில் கதை நாயகனாக நடித்து இருக்கிறார். உண்மையில் ராஜன் என்ற அந்த கேரக்டராகவே வாழ்ந்து இருக்கிறார். குடும்பத்தில் அவர் காட்டுகிற பாசம், நண்பர்களிடம் பேசுகிற விஷயங்கள், பள்ளியில் அவமானங்களை சந்திக்கும்போது சீறுகிற தருணங்கள் என பல இடங்களில் தான் தேர்ந்த நடிகர் என்பதை நிரூபித்து இருக்கிறார். வேலை இழந்து ஒரு நிகழ்ச்சியில் அவர் பாடுவது, அடுத்து நடக்கும் விஷயங்கள், மகன், மகளுக்காக அவர் செய்கிற வேலைகள், மனைவியுடன் செல்லச்சண்டை என அக்மார்க் நடுத்தர குடும்ப தலைவராகவே வாழ்ந்து இருக்கிறார். என்ன, பாட்டு போட்டி, அவர் பாடுகிற சீன்கள் படத்துடன் ஒட்டவில்லை. அது, தனித்து நிற்கிறது. ரொம்பவே நாடகத்தனமாக இருக்கிறது. ஆனாலும், அவர் கேரக்டரை பார்க்கும்போது நம் குடும்பத்தில் இருந்த, இருக்கும் சிலர் நினைவுகள் வந்து போவது உறுதி.
கிஷோர் மனைவியாக, டீச்சராக வரும் சுபத்ரா ராபர்ட் அந்த கேரக்டருக்கு வலு சேர்த்து இருக்கிறார். கணவருக்காக அவர் பேசுகிற விஷயங்கள், வீட்டில் நடந்து கொள்ளும் விதம் மனதில் நிற்கிறது. கிஷோர் மகன், மகள் பார்வையில் தங்கள் குடும்பம் எப்படி இருந்தது. என்ன நடந்தது என்ற பிளாஷ்பேக் ஆக கதை நகர்கிறது. மகனாக வரும் ஐஸ்வந்த், மகள் தனன்யா ஆகியோரும் இயல்பாக நடித்து இருக்கிறார்கள். அந்த பிரின்ஸ்பால் நம்மை கோபப்படுத்துகிற அளவுக்கு கலக்கியிருக்கிறார். வில்லனாக ஹரிஷ் உத்தமன் வருகிறார். அந்த காட்சிகளும் படத்துடன் ஒட்டவில்லை. அதேசமயம், அந்த வீடு சம்பந்தப்பட்ட கிளைமாக்ஸ் உருக்கம். நம்முடைய பழைய வீடுகள், நினைவுகள் தாலாட்ட வைக்கும்.
ரொம்ப இயல்பான கதை, எதார்த்தமான நடிப்பு ஆகியவை படத்துக்கு பிளஸ். குடும்பம், ஸ்கூல் போர்ஷன்களை அவ்வளவு லைவ்வாக எடுத்து இருக்கிறார் இயக்குனர். ஸ்கூலில் நடக்கும் பாலிடிக்ஸ், கிஷோருக்கு ஆதரவாக மற்றவர்கள் இருப்பது ஆகியவை பீல் பண்ண வைக்கிறது. அதேசமயம், எடிட்டிங் பாணியில் பிளாஷ்பேக் கதையாக சொல்வது கொஞ்சம் குழப்புகிறது. அதை சரி செய்து இருந்தால் இன்னும் ரசித்து இருக்கலாம். பாட்டு போட்டிதான் மையக்கரு. அதில் சுவாரஸ்யம், அழுத்தம் இல்லாதது ஏமாற்றம். பாடலுக்கான ரைட்ஸ் பிரச்னை காரணமாக, பல பாடல்களை உல்டாவாக பயன்படுத்தி இருக்கிறார்கள். அது போராடிக்கிறது. பாசிட்டிவ்வான கதையில், கிளைமாக்ஸ் பாசிட்டிவ் ஆக அமைந்து இருந்து இருக்கலாம். அந்த சீன்கள் செயற்கைதனமாக இருக்கிறது. சில இடங்களில் நாடகத்தனம் இருக்கிறது. சில இடங்கள் கொஞ்சம் போராடிக்கிறது. ஆட்டம், பாட்டம் கொண்டாட்டங்கள் இல்லாத அமைதியான கதை. படத்தில் நடித்தவர்கள் அனைவரும் நல்ல தேர்வு. அந்த முகங்களும், அவர்களின் இயல்பான நடிப்புமே படத்தை இன்னும் அழகாக்குகின்றன.
குறைகள் கொஞ்சம் இருந்தாலும் குடும்பத்துடன் படத்தை பார்க்கலாம். வெட்டு, குத்து, ரத்தம், பழிவாங்கல், போதை கதைகளுக்கு மத்தியில் மெல்லிய உணர்வுகளை சொல்லும் நல்லதொரு தன்னம்பிக்கை கதையாக, பாசத்தை, பாசிடிட்டியை வெளிப்படுத்தும் திரைக்கதையாக மெல்லிசை அமைந்துள்ளது.
மெல்லிசை - அட, இப்படிப்பட்ட அழகான குடும்ப கதைகளை பார்த்து எவ்வளவு நாளாச்சு?