உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / ஹாட்ஸ்பாட் 2 மச்

ஹாட்ஸ்பாட் 2 மச்

தயாரிப்பு : கேஜேபி டாக்கீஸ்
இயக்கம் : விக்னேஷ் கார்த்திக்
நடிப்பு : அஷ்வின், பவானிஸ்ரீ, ஆதித்யா பாஸ்கர், ரக்ஷன், பிரியாபவானிசங்கர், சஞ்சனா திவாரி, தம்பிராமையா, எம்.எஸ்.பாஸ்கர்
ஒளிப்பதிவு : ஜெகதீஷ்ரவி, ஜோசப் பால்
இசை : சதீஷ்ரகுநாதன்
வெளியான தேதி : ஜனவரி 23, 2026
நேரம் : 2 மணிநேரம்
ரேட்டிங் : 2.5 / 5

விக்னேஷ் கார்த்திக் இயக்கம், நடிப்பில், 2024ல் வெளியான ஹாட்ஸ்பாட் படத்தின் அடுத்த பாகம் இது. முதற்பாகம் மாதிரியே தயாரிப்பாளரிடம் ஒரு இயக்குனர் கதை சொல்ல தொடங்க, அந்த கதை சீன்களாக விரிகிறது. முதற்பாகத்தில் கதை சொன்ன விக்னேஷ் கார்த்திக் துாண்டுதலால், இந்த பாகத்தில் பெண் இயக்குனரான பிரியா பவானி கதை சொல்ல ஆரம்பிக்கிறார். அவர் யார்? என்பது சஸ்பென்ஸ். அவர் சொல்லும் முதற்கதை தாதா, ராஜா என்ற இரண்டு பெரிய ஹீரோக்களின் தீவிர ரசிகர்கள் பற்றியது. இரண்டு ஹீரோக்களின் படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக, என்ன நடக்கிறது. இந்த இரண்டு ரசிகர்களின் குடும்பத்தை கடத்தி வைத்து விட்டு கொலை செய்யப்போவதாக மிரட்டுபவர் யார்? அந்த கடத்தல்காரன் டிமான்டை ஹீரோக்கள் ஏற்றார்களா என்ற ரீதியில் அந்த கதை செல்கிறது. எம்.எஸ்.பாஸ்கர் மகன் ஆதித்ய பாஸ்கரும், ரக் ஷனும் அந்த ரசிகர்கள். எம்.எஸ்.பாஸ்கருக்கு முக்கியமான வேடம்.

மார்டனாக இருக்கும் மகள் சஞ்சனா திவாரிக்கும், பழக்க வழக்கங்கள், குடும்ப கவுரவத்தில் ஊறிப்போன அப்பா தம்பிராமையாவுக்கும் நடக்கும் குடும்ப பிரச்னைகள், ஈகோ, காதல் விவகாரங்கள் 2வது கதை. 2050ல் வசிக்கும் பவானிஸ்ரீக்கும், இப்போதைய கால கட்டத்தில் வசிக்கும் அஷ்வினுக்கும் இடையே எப்படி தொடர்பு ஏற்படுகிறது. இரண்டு பேரும் சந்தித்துக் கொண்டார்களா? வாழ்க்கையில் இணைந்தார்களா? என்பது கடைசி கதை. இதற்கிடையே, பிரியா பவானி சங்கர், விக்னேஷ் கார்த்திக், பிரிகிடா, கதை கேட்கும் தயாரிப்பாளர் இடையே இன்னொரு கதை ஓடுகிறது. இப்படி நாலு கதைகளை ஆந்தாலஜி பார்முலாவில் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

ஒரு படத்தில் நாலு கதைகள், நாலும் வெவ்வேறு களத்தில் இருப்பது படத்தின் பிளஸ். 2 மணி நேரத்தில் படம் முடிந்து விடுவதால், ஆந்தாலாஜி பாணியிலான 4 கதைகள் விறுவிறுப்பாக செல்வது இன்னும் பிளஸ். 2 பெரிய ஹீரோக்கள் யார் என்று நேரடியாக சொல்லாவிட்டாலும், இன்றைய முன்னணி ஹீரோக்கள் இரண்டுபேர் சாயலில் அவர்களை காண்பிக்கிறார் இயக்குனர். சில உண்மை சம்பவங்கள் அதனுடன் ஒத்து போகின்றன.

ரசிகர்கள் எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கிறார்கள். எதற்காக சண்டைபோடுகிறார்கள். ஹீரோக்கள் எப்படி சுயநலம் மிக்கவர்கள் என்பதையும் கொஞ்சம் உணர்ச்சி பூர்வமாக சொல்லியிருக்கிறார். ரசிகர்களாக வரும் ஆதித்யா பாஸ்கர், ரக் ஷன் நடிப்பு பரபர. சஸ்பென்ஸ் கேரக்டராக வரும் எம்.எஸ்.பாஸ்கர் சொல்கிற சம்பவங்கள், அவர் கொடுக்கும் அட்வைஸ் இன்றைய 'தீவிர' ரசிகர்களுக்கு ஒரு பிடிப்பினை. கொஞ்சம் நாடகத்தனம் இருந்தாலும் அந்த கதை வேகமாக முடிந்துவிடுகிறது. ஹீரோக்களின் கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யும் ரசிகர்கள் இந்த கதை சாட்டையடி

உடை, எண்ணம் விஷயத்தில் மார்டனாக இருக்கும் மகளை மாற்ற நினைக்கிறார் அப்பா தம்பி ராமையா. அதற்காக அவரும் சில விஷயங்களை செய்கிறார். யார் மாறினார்கள் என்பதை ஜெனரேஷன் இடைவெளி, ஓவர் ப்ரீடம், அப்பாக்களின் மனநிலை, இன்றைய தலைமுறையினரின் வாழ்க்கை முறை என பல விஷயங்களை அடுத்த கதையில் சொல்கிறார் இயக்குனர். தம்பி ராமையா கேரக்டர், நடிப்பு, மகளை மாற்ற அவர் செய்கிற விஷயங்கள் செம இன்ட்ரஸ்டிங். மகளாக நடித்த சஞ்சனாவும் நடிப்பில் மிரட்டி இருக்கிறார். 4 கதைகளில் மனதை அதிகமாக டச் செய்வது இந்த கதைதான்.

2050ல் வசிக்கும் பவானிஸ்ரீயை தற்செயலாக தொடர் கொண்டு பேசுகிறார், இப்போதைய காலத்தில் வசிக்கும் அஷ்வின். தங்கள் குடும்பம் பற்றி பல விஷயங்களை இரண்டுபேரும் மனம் திறந்து பேசுகிறார்கள். அதில் பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடக்கின்றன. கடைசியில் காலம் விட்டு காதலிக்கும் இவர்கள் இணைந்தார்களா என்பதை கொஞ்சம் எக்ஸ்பரிமண்டலாக எடுத்து இருக்கிறார். சில சீன்களில் வந்தாலும் பவானிஸ்ரீ நடிப்பு ரசிக்க வைக்கிறது. அஷ்வினிடமும் குறை இல்லை. அவரின் நண்பராக வருபவர்கள் அடிக்கும் லுாட்டி, கமென்ட் படத்தை கலகலப்பாக மாற்றுகிறது. குறிப்பாக அந்த கிளைமாக்ஸ் டுவிஸ்ட், கொஞ்சம் பழைய ஜோக் என்றாலும் புதுசாக இருக்கிறது. ஆனாலும் அந்த கிளைமாக்ஸ் பலருக்கு உடன்பாடாக இருக்க வாய்ப்பில்லை.

கடைசியில் பிரியா பவானி சங்கர் கேரக்டர் எண்ணம் நிறைவேறியதா என்பதுடன் படம் முடிகிறது. உண்மையில் கொஞ்சம் துணிச்சலாக அந்த கேரக்டரில் நடித்து இருக்கிறார் ப்ரியா. அவரின் காஸ்ட்யூம், ஹேர் ஸ்டைல் மிரட்டல். என்ன, நம்மால்தான் அவரை 'அப்படி' பார்க்க முடியவில்லை. அவரும் உட்கார்ந்து கதை சொல்லிவிட்டு போகிறார், நிறைய நடிக்கவில்லை. கிட்டத்தட்ட கெஸ்ட் ரோல் மாதிரிதான். இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் முதற்பாகத்தில் நன்றாக நடித்து இருந்தார். அதில் அவர் கேரக்டர் டம்மி.

ஹாட்ஸ்பாட் முதற்பாகத்திலும் பரபரப்பு, சர்ச்சை, புதுமை இருந்தது. இதிலும் இருக்கிறது. ஆனால், முதற்பாகம் அளவுக்கு ஈர்க்கவில்லை. ரசிகர், ஹீரோ ஸ்டோரியில் பீலிங் மிஸ்சிங். தம்பிராமையா போர்ஷன் ஓகே. அஷ்வின் கதையில் கடைசி சில நிமிடங்கள் மட்டுமே நன்றாக இருக்கிறது. ப்ரியா பவானி சங்கர் விஷயம் திணிக்கப்பட்டது போல தெரிகிறது. 4 கதைகளையும் ஜெகதீஷ், ஜோசப் மாறுபட்ட லைட்டிங்கில் படமாக்கி இருக்கிறார்கள். சதீஷ் ரகுநாதன் இசை சுமார்.

முதற்பாகத்தில் தயாரிப்பாளர், இயக்குனர் கதை சொல்லும் போர்ஷனில் இருந்த எனர்ஜி இதில் மிஸ்சிங். அதிலும் சில விஷயங்களை கற்பனை செய்து பார்க்கவில்லை. நிறைய சீன்கள் பெண்களின் கேரக்டர் இமேஜ் டேமேஜ் ஆகிறது. முதல் படத்துக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக, சுதந்திரம், புதுமை, கான்டர்வசி என்ற பெயரில் கொஞ்சம் ஓவராக சிந்தித்து, படத்தின் அழகியலை குறைத்துவிட்டார் இயக்குனர். யூத் சிலருக்கு பிடிக்கலாம். குடும்பத்தினர், பெண்கள் ரசிப்பது கஷ்டம்.

ஹாட் ஸ்பாட் 2 மச் - கொஞ்சம் ஆர்வக்கோளாறுதனமாக எடுக்கப்பட்ட 'ஹாட்' இல்லாத கதை



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !