ஜாக்கி (2026)
தயாரிப்பு : பிகே7 ஸ்டூடியோஸ்
இயக்கம் : பிரகபல்
நடிப்பு : யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணா, அம்மு அபிராமி, மதுசூதனன் ராவ்,
ஒளிப்பதிவு : என்.எஸ்.உதயகுமார்
இசை : சக்திபாலாஜி
வெளியான தேதி : ஜனவரி 23, 2026
நேரம் : 2 மணிநேரம் 27 நிமிடம்
ரேட்டிங் : 3 / 5
மதுரையில் ஆட்டோ டிரைவராக இருக்கும் ஹீரோ யுவன் கிருஷ்ணாவுக்கும், அந்த ஏரியாவில் தொழிலதிபராக இருக்கும் ரிதன் கிருஷ்ணாவுக்கும் கிடாய் சண்டை போட்டியால் பகை உருவாகிறது. யாராலும் ஜெயிக்க முடியாத ரிதன் கிடாயை, யுவன் கிடாய் தோற்கடித்துவிடுகிறது. அந்த அவமானம் அவரை கோபப்படுத்துகிறது. மீண்டும் அவர்கள் களத்தில் மோதுகிறார்கள். யார் கிடாய் ஜெயித்தது. போட்டியால் ஏற்படும் பகை எந்த அளவுக்கு பிரச்னைகளை ஏற்படுத்தியது என்பதை, இதுவரை யாரும் சொல்லாத கிடாய் சண்டை பின்னணியில், மாறுபட்ட படமாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர் பிரபகல். இதற்குமுன்பு இவர் இயக்கிய மட்டி என்ற கார் ரேஸ் படமும் தமிழ் சினிமாவில் பேசப்பட்டது.
கிடாய் வளர்ப்பவர்கள் இரண்டு பேர், அவர்களின் ஆதரவாளர்கள், இரண்டு கிடாய் இடையே ஏற்படும் மோதல்தான் கதை. அதை மதுரை மண் மணத்துடன், அங்கே தங்கியிருந்து நிறைய ஆராய்ச்சி செய்து, நடிப்பவர்கள், கிடாய்களுக்கு நன்கு பயிற்சி கொடுத்து ஒரு அழுத்தமான படத்தை கொடுத்து இருக்கிறார் இயக்குனர். ஜல்லிக்கட்டு, சேவல்சண்டை குறித்து படங்கள் வந்தநிலையில், தமிழ்சினிமாவில் கிடாய் சண்டை குறித்து இந்த அளவுக்கு எந்த படமும் சொல்லியதில்லை. இவ்வளவு விஷயங்களை சொன்னது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாலக்காட்டில் இருந்து வந்த பிரபகல் அவர் டீம், அதை விளக்கமாக பதிவு செய்து இருப்பதை பாராட்டலாம்.
ஆட்டோ டிரைவராக வரும் யுவன் கிருஷ்ணா கொஞ்சம் கரடுமுரடாக தெரிகிறார். ஆனால், அவர் நடிப்பு சாப்ட். மதுரை ஸ்லாங் பேசிக்கொண்டு அவர் செய்யும் அலப்பறைகள், கிடாய் மீது வைத்திருக்கும் அன்பு, கிடாய் சண்டையில் அவர் உணர்ச்சிகரமாக செய்யும் விஷயங்கள் பிரஷ் ஆக இருக்கிறது. குறிப்பாக, வில்லனுடன் மோதும் இடங்கள் விறுவிறுப்பு. அம்மு அபிராமியுடனான காதல் காட்சிகளில் மட்டும் நடிப்பு பத்தவில்லை.
வில்லனாக நடித்து இருக்கும் ரிதன் கிருஷ்ணா போட்டியில் தோற்றவுடன் வேறு மனநிலைக்கு மாறி, சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார். கிடாய் சண்டை நடக்கும் இடங்களில், தனிப்பட்ட பழிவாங்கும் விஷயங்களில் அவரின் கோபம் கலந்த கேரக்டர் கதைக்கு பலம். கிடாய் சண்டை போட்டியை நடத்தும் பெரிய மனிதராக மதுசூதன் ராவ், யுவன் டீமில் இருக்கும் சித்தன், கேபிஓய் யோகி கேரக்டர், நடிப்பு மதுரை பாசக்கார மக்களை நினைவுப்படுத்துகிறது.
ஹீரோ அக்காவாக வரும் சரண்யா ரவிச்சந்திரனும் சில இடங்களில் உருக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அம்மு அபிராமி காதல் காட்சிகள் பெரிதாக செட்டாகவில்லை. மதுரை சுற்றுவட்டாரத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டதும், மதுரை மக்கள் பலர் வருவதும் படத்தை இன்னும் இயல்பாக்கி, கவனிக்க வைக்கிறது.
கிடாய் சண்டை நடக்கும் களம், போட்டி விதிமுறைகள், கிடாய்களின் ஆக்ரோசம், பரிசு, அதனால் ஏற்படும் கவரவம், போட்டியால் ஏற்படும் பகை, சண்டை சச்சரவுகள் ஆகியவை புதுசாக இருப்பதால், அட, இப்படியெல்லாம் தமிழகத்தில் நடக்கிறதா என்ற ஆச்சரியம் ஏற்படுகிறது. அதை விறுவிறுப்பாக படமாக்கிய விதமும், சொன்ன தகவல்களும் அருமை. மதுரை ஸ்லாங் ஓரளவு பிட் ஆகி இருக்கிறது. போட்டிகளை, சண்டைகளை விறுவிறுப்பாக காண்பிக்கிறது என்.எஸ்.உதயகுமார் கேமரா, சக்தி பாலாஜி பின்னணி இசையும் படத்தை உயிரோட்டமாக வைக்க செய்கிறது. கிடாய் போட்டி மைதானம், ஹீரோ வீடு ஆகியவை ஆர்ட் டைரக்டரின் திறமைக்கு சான்று
ஹீரோ, வில்லன், மற்ற கேரக்டரை தவிர கிடாய் படத்தில் அருமையாக நடித்துள்ளது அல்லது நடிக்க வைக்கப்பட்டுள்ளது என சொல்லலாம். ஹீரோ வளர்க்கும் கிடாய், வில்லனின் 2 கிடாய் ஆகியவை களத்துக்கு வருவது, அவற்றை பாசமாக இருவரும் வளர்ப்பது, கட்டாரியின் சொல் கேட்டு போட்டியில் ஆக்ரோசமாக மோதுவது ஆகியவை ஜாக்கியை பல ஆண்டுகள் நினைவில் வைக்க செய்யும். கிடாய் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பு, அக்கறையும் விலங்குகள் பிரியர்களை உருக்க வைக்கும்
ஹீரோ, வில்லன் உருவ அமைப்பு, கெட்அப் மதுரைக்கு ஏரியாவுக்கு செட்டாகவில்லை. அவர்களின் தோற்றத்தில் மாற்றம் செய்து இருக்கலாம். அதேபோல், ஹீரோ டயலாக்குகளை குறைத்து, நடிப்பை அதிகரித்து இருக்கலாம். சில முக்கியமான சீன்களில் கூட ஹீரோ நடிப்பு, அந்த டப்பிங் டோன் மைனஸ் ஆகிவிடுகிறது. வில்லனின் சில ஓவர் வில்லத்தனம் போராடிக்கிறது. படத்தின் நீளத்தை குறைத்து இருந்தால் இன்னும் விறுவிறுப்பாக இருந்து இருக்கும். ஆனாலும், தமிழ் சினிமாவில் யாரும் பதிவு செய்யாத பாலக்காடு இயக்குனரின் புதிய முயற்சியை, அதற்காக எடுத்துக் கொண்ட உழைப்பு, அர்ப்பணிப்பை பாராட்டலாம். மாறுபட்ட சினிமாவை விரும்புகிறவர்களுக்கு ஜாக்கி புது அனுபவத்தை கொடுக்கும்.
ஜாக்கி - ஹீரோ, வில்லன் சண்டைடைய விட அந்த கிடாய் சண்டை கண்ணுக்குள்ளே நிற்குது