உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / மாயபிம்பம்

மாயபிம்பம்

தயாரிப்பு : செல்ப் ஸ்டார்ட் புரட க்ஷன்
இயக்கம் : கே.ஜே.சுரேந்தர்
நடிப்பு : ஆகாஷ் நடராஜன், ஜானகி, ஹரி, ராஜேஷ், அருண்குமார்
ஒளிப்பதிவு : எட்வின்
இசை : நந்தா
வெளியான தேதி : ஜனவரி 23, 2026
நேரம் : 2 மணிநேரம் 25 நிமிடம்
ரேட்டிங் : 3 / 5

கடலுாரை சேர்ந்த ஹீரோ ஆகாஷ், சிதம்பரத்தில் டாக்டருக்கு படித்து வருகிறார். அங்கே நர்ஸ் ஆக பணியாற்றும் ஜானகியை தற்செயலாக சில முறை சந்திக்கிறார். நண்பர்களின் தவறான ஆலோசனை மற்றும் வழி நடத்தலால் அவரை என்ன செய்கிறார். அந்த சம்பவத்தால் பாதிக்கப்படும் ஜானகி எப்படி மாறுகிறார். ஆகாஷ், ஜானகி காதல் கை கூடியதா? டாக்டர் ஆகி இருக்க வேண்டியவர் கைதி ஆனது ஏன்? இதுதான் கே.ஜே.சுரேந்தர் இயக்கியுள்ள மாயபிம்பம் படத்தின் கதை. 5 ஆண்டுகளாக உருவாகி வரும் இந்த படம் பல்வேறு போராட்டங்களுக்குபின் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

நாலு நண்பர்கள், பெண்கள் குறித்து அவர்களின் பார்வை, ஆசைகள், ஏக்கம், கிண்டல் பேச்சு என படம் இயல்பாக தொடங்குகிறது. ஹீரோவுக்கு ஒரு சின்ன விபத்து நடக்க, ஆஸ்பிட்டலில் நர்ஸ் ஆக இருக்கும் ஹீரோயினுடன் அவர் ஓரளவு நெருங்கி பழகுகிறார். இருவரும் நண்பர்கள் ஆகிறார்கள் என கலகலப்பாக கதை நகரும்போது ஒரு சம்பவம் நடக்க, கதையின் போக்கு மாறுகிறது. அடுத்து நடக்கும் விஷயங்கள், கிளைமாக்ஸ் யாரும் எதிர்பாராதவை. புதுமுகங்களை வைத்து புதுமுக இயக்குனரான சுரேந்தர் நல்ல படத்தை கொடுத்து இருக்கிறார் என்றே சொல்லலாம். படத்தின் பெரிய பிளஸ் சினிமாதனம் இல்லாத நடிகர்கள், களம், கதை. ஒரு படம் பார்க்கிற உணர்வு மாதிரி தெரியாமல், அந்த கதைக்குள் நாமும் பயணிக்கிற உணர்வு வருகிறது.

ஹீரோ ஆகாஷ் 'ஹீரோ' என்று சொல்ல முடியாத அளவுக்கு பக்கத்து வீட்டு பையன் மாதிரி இருக்கிறார். அவரின் பேச்சு, கேள்வி, தவிப்பு, ஆதங்கம் எல்லாமே படத்தை அழகாக்கி இருக்கிறது. நண்பர்களுடன் அவர் பேசுவது, ஹீரோயினுடன் பேச துடிப்பது, ஹீரோயினை சந்திக்க நினைப்பது போன்ற சீன்கள் மிக அழகாக வந்துள்ளது. ஒரு கட்டத்துக்குபின் ஹீரோயினை தேடுவது, சில விஷயங்கள் கேள்விப்பட்டு தவிப்பது படத்தின் மறக்க முடியாத சீன்களாகி இருக்கின்றன. ஹீரோ ஓபனிங் காட்சி, கிளைமாக்ஸ் காட்சி எமோஷனனலாக இருக்கிறது.

ஹீரோயின் ஜானகி, அவரின் கண்கள், பேச்சு, வெட்கம், நடை, உடை ஆகியவை யாருப்பா இந்த பொண்ணு என கேட்க வைக்கிறது. அவரும் சினிமாதனம் இல்லாத ஒரு சின்ன டவுண் பொண்ணை போல, கியூட் ஆக நடித்து இருக்கிறார். அவரின் கண்களே பல கதைகள் பேசுகின்றன. ஒரு கட்டத்தில் அவரின் தோற்றம், அவருக்கு ஏற்பட்ட நிலை உண்மையிலே பதற வைக்கிறது. ஹீரோவின் நண்பர்களாக வருபவர்கள், அவர்களின் அந்த வயது ஆசை, பேச்சுகள் ரசிக்க வைக்கிறது. அந்த ஆண்டி சமாச்சாரத்தை இந்த மாதிரி கதையில் சேர்த்திருக்க வேண்டாம்.

சுகர் பேசண்ட் ஆன ஹீரோ அப்பா, பாசக்கார அம்மா, அக்கறையுள்ள அண்ணன், அண்ணி, அவர்களின் குழந்தை என படத்தில் வரும் கேரக்டர்கள், நம்முடன் இயல்பாக ஒட்டிக்கொள்கின்றன. ஹீரோ குடும்பம் சம்பந்தப்பட்ட காட்சிகள் அவ்வளவு எளிமையாக, ரசிக்கும்படி இருக்கின்றன. படத்தின் டயலாக்கும் ரொம்பவே இயல்பாக இருப்பது பிளஸ். ஹீரோயின் தோழியாக வருபரும் நல்ல தேர்வு. அவரின் வசனங்கள், சொல்லும் விஷயங்கள் ஈர்ப்பு. சிதம்பரம், கடலுாரை நேர்த்தியாக காண்பித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் எட்வின். நந்தா இசையும் கதைக்கு பிளஸ்தான். இடைவேளைக்குபின் கதையில் தொய்வு, சில காட்சிகள் வசனங்களாகவே நீள்வது மைனஸ். ஒரு டாக்டர் செய்கிற விஷயமா இது என்ற கேள்விகள்? காதலுக்காக இப்படி செய்வார்களா என்ற சந்தேகங்கள் வருவதும் மைனஸ். சில காட்சிகளில் நாடகத்தனம் இருக்கிறது. சில குறைகள் இருந்தாலும், படம் நிறைவாக இருக்கிறது.

சில சமயம் எதிர்பார்ப்பு இல்லாமல் செல்லும் படங்கள், மனதை கலங்க வைக்கும். அட, இதை எதிர்பார்க்கலையே என சொல்ல வைக்கும். அந்த படத்தின் சீன்கள் மனதில் பல ஆண்டுகள் இருக்கும். அப்படிப்பட்ட படம் மாயபிம்பம். நட்பு, காதல், எதிர்பாராமல் நடக்கும் விஷயங்களின் பாதிப்பு என நிறைய விஷயங்களை கதை பேசுகிறது. படத்தின் தொடக்கம் ஒரு மாதிரியாக இருக்கிறது. இது இந்த மாதிரி படமோ என நாம் யோசிக்கும்போது வேறு கதை சொல்கிறார் இயக்குனர். இது இப்படி பட்ட படமோ என்று நினைக்கும்போது கதையின் டிராக் மாறுகிறது. கிளைமாக்ஸ் மனதை கலங்க வைக்கிறது. கதை, திரைக்கதை, புதுமுகங்களின் நடிப்பு மாயபிம்பத்தை நம் மனதோடு கட்டிப்போடுகிறது.

மாயபிம்பம் - சினிமாதனம் இல்லாத நல்ல சினிமா



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !