காந்தி டாக்ஸ்
தயாரிப்பு: ஜீ ஸ்டூடியோஸ்
இயக்கம்: கிஷோர் பாண்டுரங் பெலேகர்
நடிப்பு: விஜய்சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதி ராவ்
ஒளிப்பதிவு : கரண்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
வெளியான தேதி: ஜனவரி 30, 2026
நேரம்: 2 மணி 12 நிமிடங்கள்
ரேட்டிங்: 2.5 / 5
மும்பையில் புறாக்கூடு மாதிரியான ஒரு குடியிருப்பில் வயதான, நோயாளி அம்மாவுடன் வசிக்கிறார் விஜய்சேதுபதி. தினமும் வேலை தேடி அலைந்தாலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. வறுமையில் கஷ்டப்படுகிறார். இதில் எதிர் வீட்டில் வசிக்கும் அதிதி ராவ்வுடன் காதல் வேறு. அதே மும்பையில் ஒரு விபத்தால் தனது குடும்பத்தையும், இன்னொரு விபத்தால் தனது சொத்துகளை இழந்து
தவிக்கிறார் தொழலதிபரான அரவிந்த்சாமி. அவரிடம் இருந்து பணத்தை கொள்ளையடிக்கலாம் என ஆசைப்பட்டு அதற்கான திட்டம் தீட்டி, அவருடைய பங்களாவுக்குள் நுழைகிறார் விஜய்சேதுபதி. அதே நேரத்தில் வேறுஒரு திட்டம் தீட்டி பங்களாவை கொளுத்த முயற்சிக்கிறார் அரவிந்தசாமி. அங்கே மாட்டிய விஜய்சேதுபதிக்கும், இன்னொரு திருடனுக்கும் என்ன ஆனது? இதுதான் காந்தி டாக்ஸ் படக்கரு.
மராட்டிய இயக்குனர் கிஷோர் இயக்கிய படம், பல ஆண்டுகளுக்கு பின் தமிழில் வந்திருக்கும் மவுனபடம். சில நிமிடங்களில் மவுன படத்தை ரசிப்பதில் சின்ன பிரச்னை இருந்தாலும், சற்றே நேரத்தில் கதையுடன் ஒன்றிவிட வைத்துவிடுகிறார் இயக்குனர். விஜய்சேதுபதியின் பிரச்னை, செயல்பாடுகள், ஏக்கம், ஏமாற்றம், பணப்பிரச்னையை அழகாக சொல்கிறார். மும்பை போன்ற மாநகரத்தின் தன்மை. ஏழைகள், நடுத்தர மக்களின் பிரச்னை. பணக்காரர்களுக்கும் இருக்கும் பிரச்னை. பக்கத்துல வீட்டுகாரர்கள், தொழிலாளர்கள், பணத்தாசை பிடித்தவர்கள், ஒரு பிக்பாக்கெட் காரன் என பலரின் மனநிலையை எளிமையான சீன்களால் சொல்கிறார். அதை வசனங்கள் இல்லாவிட்டாலும் புரிந்து கொண்டு ரசிக்க முடிகிறது. அதுவே படத்தின் பலம்.
நோயாளி அம்மாவுடன் போராடிக்கொண்டே, வேலை தேடிக்கொண்டே, எதிர் வீட்டில் வசிக்கும் அழகான பெண்ணை காதலிக்கிற கேரக்டரில் விஜய்சேதுபதியின் நடிப்பு திறமை பளீச்சிடுகிறது. இண்டர்வியூ போய் அவமானப்படுவது, காதலியை பெண் பார்க்கிற சீன், கத்தி வாங்க மார்க்கெட் செல்வது, அம்மாவுக்காக பக்கத்து வீட்டு உணவை திருடுவது, அரசியல்வாதியிடம் சீறுவது என பல இடங்களில் பின்னி எடுத்து இருக்கிறார். அரவிந்தசாமி பங்களாவுக்கு என்ட்ரி ஆகி அவர் திருட நினைக்கிற காட்சிகளும், பங்களாவை சுற்றி, சுற்றி வருகிற இடங்களும் இன்ட்ரஸ்டிங். ஆனாலும், அந்த காட்சிகளில் கொஞ்சம் ஓவர் ஆக்டிங்கை தவிர்த்து இருக்கலாம்.
பணத்தை, குடும்பத்தை இழந்து கடனாளியாக தவிக்கிற கேரக்டரில் அரவிந்த்சாமியும் நடித்து கலக்கியிருக்கிறார். அவர் பின்னால் கார் ஓட்டும் காட்சி, பங்களாவில் தனிமையில் அழுகும் இடங்கள் அற்புதம். அழகான பெண்ணாக அவ்வப்போது அதிதி ராவ்வும் வந்து காதல் செய்கிறார். அவருக்கும், விஜய்சேதுபதிக்குமான காதல் கொஞ்சம் நெருடுகிறது. கொஞ்சம் செயற்கைதனமாக இருக்கிறது. இவர்களை தவிர, பக்கத்து வீட்டுக்காரர், அரவிந்த்சாமியின் டிரைவர், போலீஸ்காரர், இன்டர்வியூ நடத்துபவர், விஜய்சேதுபதி அம்மா ஆகியோர் கேரக்டரும் வித்தியாசமாக, அழுத்தமாக இருக்கிறது. இவர்களின் நடிப்பும் நம்மை கட்டிப்போடுகிறது.
குறிப்பாக, அந்த கோர்ட் சீன், பேரம் நடக்கும் விதம் இயக்குனரின் திறமைக்கு சாட்சி. கிளைமாக்சில் பணம் முக்கியமா? இல்லையா என்பதை காந்தி பாணியில் சொல்லியிருக்கிறார். மராட்டிய இயக்குனர் என்பதால் சத்ரபதி சிவாஜியையும் உயர்வாக காண்பித்து இருக்கிறார். கிரணின் கேமரா மும்பையை , விஜய்சேதுபதி வசிக்கும் வீட்டை, அந்த குடியிருப்பை, அரவிந்த்சாமி பங்களாவை அவ்வளவு அழகாக காண்பித்து இருக்கிறது. திருடனாக வரும் மராட்டி நடிகர் சித்தார்த் கெட்அப், அவருக்கான சீன், கிண்டல், தவிப்பு பிரஷ் ஆக இருக்கிறது. கிளைமாக்ஸ் உண்மையில் பாராட்டகூடியது.
மவுன படம் என்பதால் சில காட்சிகளை, இயக்குனரின் கருத்தை, கிண்டலை புரிய கொஞ்சம் தாமதம் ஆகிறது. சில காட்சிகள் புரியவதில்லை. அதிலும் பங்களாவில் நடக்கும் இரண்டாம் பாதி கதை நீளம் அதிகம். அது போராடிக்க வைக்கிறது. என்ன நடக்கிறது என்று புரியவே பல நிமிடம் ஆகிறது. அதை குறைத்து இருக்கலாம். வசனங்கள் இல்லாத இடங்களை ஏ.ஆர்.ரஹ்மான் இசை பூர்த்தி செய்து இருக்கிறது.
படத்தின் பல இடங்களில் மிக உன்னிப்பாக, ரசனையுடன் இசைக்கருவிகளை வாசித்து இருக்கிறார். பின்னணி இசை படத்தின் உயிர், பிளஸ். அதேசமயம் மவுனப்படத்தில் பாடல் ஏன்? ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்பதற்காக பாடல்களை வைத்து மரபுகளை உடைக்கலாமா என்று கேள்விக்கும் விடை இல்லை. பாடல்கள் இருப்பதால் மவுன படம் என்ற வகையில் சேருமா என்ற சந்தேகமும் வருகிறது. பாடல்களும் சுமார் ரகம்தான்.
ஒரு மாறுபட்ட கதையை விரும்புகிறர்களுக்கு, சத்தம் இல்லாத அந்த கால கருப்பு வெள்ளை படத்தை ரசிப்பவர்களுக்கு காந்திடாக்ஸ் பிடிக்கும். மற்றவர்களுக்கு இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள். இதென்ன வீண் முயற்சி. ஒன்றுமே புரியலையே என்ற எண்ணம் வரும். வழக்கமான கமர்ஷியல் சினிமா பார்வையாளர்களுக்கு பல இடங்களில் கொட்டாவி வரும். இப்படிப்பட்ட சீரியஸ் கதைகளை ரசிப்பவர்களோ கண்டிப்பாக குறை சொல்வார்கள். அந்த அளவுக்கு திரைக்கதையில் பல குறைகள். ஆக, மவுனப்படம் என்ற தனித்துவத்தில், சினிமாவுக்கான தனித்துவம், புதுமை, கமர்ஷியல் விஷயங்கள் இல்லாமல் வந்து இருக்கிறது காந்தி டாக்ஸ். படத்தின் தலைப்புக்கும், கதைக்குமான தொடர்பே பலருக்கு புரியாது என்பது தனிக்கதை.
காந்தி டாக்ஸ் - சவுண்டு இல்லை ஓகே.. கதையிலும் அது குறைவாக இருப்பதா?