உள்ளூர் செய்திகள்

லாக்டவுன்

தயாரிப்பு: லைகா புரொடக்ஷன்ஸ்
இயக்கம்: ஏ. ஆர். ஜீவா
நடிப்பு: அனுபமா பரமேஸ்வரன், சார்லி, நிரோஷா, ப்ரியா கோதை வெங்கட், லிவிங்ஸ்டன்
ஒளிப்பதிவு: கே.ஏ.சக்திவேல்
இசை: என்.ஆர்.ரகுநந்தன்
வெளியான தேதி: ஜனவரி 29,2026
நேரம்: 2.00 மணி
ரேட்டிங்: 1.5

வேலை கிடைக்காமல் தவித்து வரும் மிடில்கிளாஸ் பெண்ணான அனுபமா பரமேஸ்வரன், வேலை தேடி ஒரு பார்ட்டிக்கு செல்லும்போது தோழி வற்புறுத்ததால் சரக்கு அடித்து மட்டை ஆகிறார். அப்போது அவரை யாரோ முகம் தெரியாதவர் கற்பழிக்க, கர்ப்பம் ஆகிறார். குடும்பத்துக்கு தெரியாமல் அதை கலைக்கும் முயற்சியில் இறங்கும் வேலையில் இந்தியாவில் கொரோனா லாக்டவுன் தொடங்குகிறது. அந்த சூழ்நிலையில் டாக்டர், மாத்திரைகளை தேடி அலைகிறார். அந்த காலகட்டத்தில் கருவும் வளர, அனுபமா பரமேஸ்வரன் தனது கர்ப்பத்தை கலைத்தாரா? இல்லையா? இதுதான் ஏ.ஆர்.ஜீவா இயக்கியுள்ள லாக்டவுன் படத்தின் கரு.

கொரோனா காலத்தில் எத்தனையோ பேர், எத்தனையோ வழிகளில் கஷ்டப்பட்ட நிலையில், அப்போது சரக்கு அடித்ததால் மர்ம நபரால் கர்ப்பமான கருவை கலைக்க ஒரு இளம் பெண் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார் என்ற 'மாறுபட்ட' சிந்தனையில் இந்த படத்தை எடுத்து இருக்கிறார் இயக்குனர். மலையாளம், தமிழில் நல்ல நடிகை என்ற பெயர் வாங்கிய அனுபமா பரமேஸ்வரன் இந்த கதையில் எப்படி நடிக்க சம்மதித்தார் என்ற கேள்வியும் படம் பார்க்கும் அனைவருக்கும் எழுகிறது. காரணம், கதையில் அப்படி பல மோசமான சீன்கள். படத்தை தயாரித்து இருப்பது லைகா நிறுவனம். பல ஆண்டுகள் கிடப்பில் இருந்து, பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட படம் இப்போது ரிலீஸ் ஆகி உள்ளது

ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படம் என்பதால் ஹீரோவே கிடையாது. அனுபமா கேரக்டர், அவர் நடிப்பு, குறிப்பாக, வேலை தேடி அலைவது, கர்ப்பத்தை கலைக்க முடியாமல் தவிப்பது, அதற்கான பணம் புரட்ட முடியாமல் கஷ்டப்படுவது, டாக்டர்கள், மாத்திரையை தேடி அலைவது ஆகியவை உருக்கமான சீன்கள். இதற்கிடையே குடும்ப பிரச்னைகள், குடும்பத்தினரை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஆகியவற்றால் சிக்கி கலங்குவது உண்மையிலே படத்தின் உருப்படியான சீன்கள்.

உளவியல் ரீதியாக ஒரு பெண் எப்படி கஷ்டப்படுகிறார் என்று சொன்னவிதம் ஓகே. அவருக்கு அப்பாவாக வரும் சார்லி, அம்மா நிரோஷா ஆகியோர் பாசக்கார மிடில்கிளாஸ் பெற்றோர்களாக நடித்து இருக்கிறார்கள். அனுபமா தோழியாக வரும் ப்ரியாகோதை வெங்கட் நல்ல நடிப்பால் யாருப்பா இந்த பொண்ணு என கேட்க வைக்கிறார். மிடில் கிளாஸ் குடும்பங்களின் பொருளாதார பிரச்னை, பெற்றோர்களின் தவிப்பதை காண்பித்தது பிளஸ்.

லிவிங்ஸ்டன் சம்பந்தப்பட்ட ஒரு கிளைக்கதை வருகிறது. அதற்கும் படத்துக்கும் அதிகம் சம்பந்தம் இல்லை. அந்த சீன்கள் இல்லாவிட்டாலும் படத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. ஹீரோயினுக்கு உதவும் நண்பராக இயக்குனரே நடித்து இருக்கிறார். மற்றபடி சொல்லிக்கொள்ளும்படி யாரும் நடிப்பில் மிரட்டவில்லை.

கொரோனா காலத்தில் தங்கள் உயிரை கொடுத்து, உயிர் பற்றி கவலைப்படாமல் பணியாற்றியவர்கள் மருத்துவதுறையினர், டாக்டர்கள். அவர்களை இந்த கதையில் தவறாக காண்பித்து இருக்கிறார் இயக்குனர். பணத்துக்காக அலைபவர்களாக, பணம் கொடுக்காவிட்டால் தங்கள் கடமையை செய்யாதவர்களாக படத்தில் பல இடங்களில் காண்பித்து இருக்கிறார். அதிலும் கடைசியில் அனுபமா கர்ப்பத்தை கலைக்க ஒருவர் 1 லட்சம் பேரம் பேசுவதும், பின்னர் அவரை மிரட்டி செய்யும் சில செயல்களும் படு மோசம்.
மருத்துவதுறையினர் மீது உங்களுக்கு இவ்வளவு கோபம் ஏன் இயக்குனரே? அதேபோல் படத்தில் காண்பிக்கப்படும் பெண்களின் கேரக்டர் தவறானவர்களாகவே அதிகம் காண்பிக்கப்படுவது போல கதையமைப்பு ஏனோ? சில இடங்களில் ஆண்களும் வக்கிரபுத்தி உள்ளவர்களாக, பணத்தாசை பிடித்தவர்களாக, காதல் என்ற பெயரில் ஏமாற்றுபவர்களாக இருக்கிறார்கள். இயக்குனர் எண்ண ஓட்டம் என்னவோ? பாடல்கள், ஒளிப்பதிவில் புதுமை இல்லை.

கொரோனா முடிந்து இத்தனை ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில், அப்போது நடந்த சில விஷயங்கள், வெறிச்சோடிய தெருக்கள், பணக்கஷ்டம், மனக்கஷ்டத்தை இந்த படம் நினைவுக்கு கொண்டு வருகிறது. அதேசமயம், கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவத்துறையினர் மற்றும் பெண்களை தவறாக காண்பிக்கிறது. அந்த பார்ட்டியில் அனுபமாவுக்கு என்ன நடந்தது? அந்த கயவன் யார் என்பதை இயக்குனர் சொல்லவில்லை. கிளைமாக்சில் என்ன சொல்ல வருகிறார் என்றும் புரியவில்லை. படம் சப்பென முடிந்துவிடுகிறது. இதை தேசியவிருதுக்கும், மற்ற விருதுக்கும் அனுப்ப போகிறார்களாம். முடியலை சாமி!

லாக்டவுன் - அனுபமா மீதான மரியாதையை டவுன் ஆக்கிய கதை



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !