உள்ளூர் செய்திகள்

க்ராணி

தயாரிப்பு : விஜயாமேரி யுனிவர்சல்
இயக்கம் : விஜயகுமாரன்
நடிப்பு : வடிவுக்கரசி, கஜராஜ், சிங்கம்புலி, திலீபன், ஆனந்த்நாக்
ஒளிப்பதிவு : மணிகண்டன்
இசை : செல்லையா பாண்டியன்
வெளியான தேதி : ஜனவரி 30, 2026
நேரம் : 2 மணிநேரம் 04 நிமிடம்
ரேட்டிங் : 2.25 / 5

லண்டனில் இருந்து மனைவி, 2 குழந்தைகளுடன் கிராமத்திற்கு வருகிறார் ஆனந்த் நாக். அங்குள்ள ஒரு பழைய வீட்டில் குடியேறி விவசாயம் செய்ய திட்டமிடுகிறார். அப்போது அந்த வீட்டிற்கு பரிதாபமான நிலையில் வருகிறார் க்ராணி (தமிழில் பாட்டி) வடிவுக்கரசி. அந்த வீட்டில் இருக்கும் குழந்தைகளை கொன்று, அவர்களின் இதயத்தை பறிக்க நினைக்கிறார். உண்மையில் வடிவுக்கரசி யார்?, குழந்தைகளின் இதயத்தை விரும்புவது ஏன்?, அவரின் திட்டம் பலித்ததா?, அதை தடுக்க வரும் போலீஸ்காரர்களான சிங்கம்புலி, திலீபனுக்கு என்னாச்சு என்பதை கொஞ்சம் பயம் கலந்த டோனில் சொல்லும் படம் க்ராணி.

பேய் கதை மாதிரி இருந்தாலும், இது பேய் படமல்ல, மந்திர தந்திரங்கள் கற்பனை கலந்த திகில் கதை என்று சொல்லலாம். எப்போதும் இளமையாக இருக்க நினைக்கும் இரண்டு பேராசைகாரர்களின் கதை என்றும் சொல்லலாம். கேரள பாணியில் இருக்கும் அந்த பழைய வீட்டிற்கு வரும் குடும்பம், மாற்றுதிறனாளி குழந்தைகள், அந்த ஊரில் நடக்கும் மர்ம கொலை என முதலில் கொஞ்சம் நேரம் எங்கயோ கதை சுற்றுகிறது. அந்த வீட்டுக்குள் பாட்டியான வடிவுக்கரசி நுழைந்தவுடன் கதை சூடு பிடிக்க தொடங்குகிறது. அவர் யார்? அவரின் கணவர் யார்? அவர் என்ன மாதிரியான தவறான செயல் செய்ய ஊர் மக்களால் தண்டிக்கப்படுகிறார் என்ற பிளாஷ்பேக் சீன்கள் விறுவிறுப்பாக கதையை நகர்த்துகின்றன. அந்த வீட்டுக்குள் க்ராணியான வடிவுக்கரசி நடத்தும் அதிரடி விஷயங்களே மீதி கதை.

பங்களா மாதிரி நடக்கும் அந்த அழகான பழைய வீட்டில்தான் பெரும்பாலான கதை நடக்கிறது. அந்த வீட்டின் கதவுகள், அதற்குள் இருக்கும் மர்மம், படிக்கட்டுகள் அவ்வளவு அழகு. பின்னர் அங்கே நடக்கும் விஷயங்கள் அச்சுறுத்துகிறது. அந்த வீட்டில் இருக்கும் குழந்தைகளின் இதயத்தை கைப்பற்ற வடிவுக்கரசி நடத்தும் ருத்ர தாண்டவே கதையின் உயிர். பாட்டி கெட்அப்பில் உண்மையில் பயமுறுத்துகிறார் வடிவுக்கரசி. அந்த மேக்கப் பக்காவாக செட்டாக இருக்கிறது. அதிகம் பேசாமல், நடிப்பால் பேசியிருக்கிறார் வடிவுக்கரசி.

அவரின் கொடூர சிந்தனை, செயல்கள் இன்னும் பயத்தை வரவழைக்கிறது. இரண்டு குழந்தைகளை, தன்னை தடுக்க வரும் போலீஸ்காரர்களை அவர் துரத்தும் காட்சிகள் திகிலடைய வைக்கிறது. அதேசமயம், அந்த வயதில் அவர் ஆக் ஷன் செய்வதை, இளம் வயது போல போலீஸ்காரர்களை அடித்து துவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த லாஜிக் மீறல் படத்தை பின்னோக்கி இழுக்கிறது. வடிவுக்கரசியாக இப்படி நடித்துள்ளார் என்ற ஆச்சரியமும், அவர் கேரக்டர் பின்னணியிலும் படத்தின் பிளஸ்.

ஓவர் பில்டப் போலீஸ் ஏட்டாக வரும் சிங்கம்புலி பல சீன்களில் பேசிக் கொண்டே இருக்கிறார். அதை குறைத்து இருக்கலாம். கடைசி சில நிமிடங்கள் குழந்தைகளை காப்பாற்ற அவர் எடுக்கும் முயற்சி மட்டும் மனதில் நிற்கிறது. இன்னொரு போலீசாக வரும் திலீபன், அவர் பேசும் வசனங்கள் நச். மாற்று திறனாளியாக வரும் அந்த 2 குழந்தைகளின் நடிப்பு, சில செயல்பாடுகளும் கவர்கின்றன. மற்றபடி, ஊர் தலைவராக வரும் கஜராஜ் ஏதோ செய்யப்போகிறார் என நினைத்தால், சும்மா கையில் அரிவாளை துாக்கிக் கொண்டு ஓடுகிறார். பிளாஷ்பேக்கில் வரும் அந்த வில்லன் நடிப்பும், அவரின் ஆசையும் மிரட்டல். இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசையால் ஏற்படும் விபரீதம், அதனால் ஊரில் ஏற்படும் விளைவுகளை நன்றாக காட்சி படுத்தியிருக்கிறார் இயக்குனர். பின்னணி இசை ஓகே ரகம். அந்த வீட்டுக்குள் நடக்கும் காட்சிகளில் மணிகண்டன் கேமரா வொர்க் கவனிக்க வைக்கிறது.

வித்தியாசமான கரு, புதுக்கதை களம் என்றாலும் பாட்டியாக வடிவுக்கரசி வரும் சீன்கள், அந்த பிளாஷ்பேக் காட்சிகள் இருந்த அளவுக்கு மற்ற காட்சிகள் விறுவிறுப்பாக இல்லை. போலீஸ் விசாரணை, ஊர் தலைவர் சம்பந்த்பட்ட தேவையற்ற காட்சிகளால் படத்தின் வேகம் தடைபடுகிறது. வடிவுக்கரசியின் ஆக் ஷன் காட்சிகள் நம்ப முடியாமல் இருப்பதும் படத்தை பலவீனமாக்குகிறது.

க்ராணி - வடிவுக்கரசி ரசிகர்களுக்கு பிடிக்கும்



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !