உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புகழ் என்றும் அழியாது

புகழ் என்றும் அழியாது

""உலகத்தில் பிறந்தேன். பள்ளிப்படிப்பை முடித்தேன். அரசுத் தேர்வில் அதிக  மதிப்பெண் பெற்றேன். மேலும் படித்து  இன்ஜினியர் ஆனேன். தொழிற்சாலை  துவங்கினேன். மனைவி, மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். என் பணத்தில்  பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு வீடு, கார் வாங்கினேன். சர்வதேச நாடுகள் என்னை  அழைத்தன. என் சாதனையைப் பாராட்டி விருதுகள் அளித்து கவுரவித்தனர். நான்  ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் தான் தங்குகிறேன். விமானங்களில் பறக்கிறேன்.  என் வாழ்வு அர்த்தமுள்ளதாக இருக்கிறது”  இப்படி ஒருவர் பெருமைப்படுகிறாரா? நிச்சயமாக நீங்கள் சாதனையாளர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் உங்களிடம்  உள்ள பணத்தால் சமுதாயத்திற்கு பலன் கிடைத்துள்ளதா? என உங்களை  நீங்களே கேட்டுப் பாருங்கள்.ஜோனாஸ்சால்க் என்னும் விஞ்ஞானி ஒருவர் இருந்தார். அமெரிக்க அரசு  அவருக்கு பல விருதுகள் வழங்கி கவுரவித்தது.  புளு காய்ச்சல் பரவிய காலத்தில்  மருந்து கண்டுபிடிக்கும் வேலை இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. வெற்றிகரமாக  செய்து முடித்து பரிசுகளைப் பெற்றார்.ஆனால் ஜோனாசின் மனதில் திருப்தியில்லை. ""இந்த உலகத்தில் எத்தனையோ  பேர் உடல்குறையால் நடக்க திண்டாடுகின்றனர். போலியோவை ஒழிக்க  முடிந்ததைச் செய்ய வேண்டும். சிறுவயதிலேயே அதை தடுக்க வேண்டும் ” என  தன் குழுவினருடன் ஆலோசித்தார். அவர்களுடன் இணைந்து வெற்றிகரமாக  மருந்தும் கண்டு பிடித்தார். இன்றும் உலகம் அவரை நன்றியுடன் பாராட்டி  வணங்குகிறது. சொந்த சாதனைக்காக விருது பெறுவதை விட, உலகத்திற்கு உதவ உங்களின்  கல்வியும், அறிவும் பயன்படட்டும். இன்று போலியோ மருந்தால் பல குழந்தைகள்  நிமிர்ந்து நடக்கிறார்கள். ""நீதிமானோ பிசினித்தனம்(கஞ்சத்தனம்) இல்லாமல்  கொடுப்பான்” என்ற வசனத்தை நினைவில் கொள்ளுங்கள்.  உங்களிடம் உள்ள  பணம், கல்வி, திறமையை கஞ்சத்தனம் இன்றி உலகிற்கு வழங்குங்கள். நீங்கள்  ஒருநாள் அழியலாம்; ஆனால் புகழ் என்றும் அழியாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !