உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சியில் சத்ய சாய்பாபா ஜெயந்தி விழா: சிறப்பு பூஜை

பொள்ளாச்சியில் சத்ய சாய்பாபா ஜெயந்தி விழா: சிறப்பு பூஜை

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், சத்யசாயி பாபாவின், 94வது பிறந்த நாள் விழாவையொட்டி சிறப்பு பூஜை மற்றும் பஜன் இசை நிகழ்ச்சியும் நடந்தது.பொள்ளாச்சி சத்ய சாய் சேவா சமிதி சார்பில், சத்யசாய் பாபாவின், 94வது பிறந்த நாள் விழா, வெங்கடேசா காலனி ஸ்ரீ வாரி கார்டன்ஸ் சாய் மதுரம் கோவிலில் நடந்தது.

கடந்த, 19ம் தேதி முதல், நேற்றுமுன்தினம் (நவம்., 23ல்) வரை தினமும் காலை, 5:00 மணிக்கு ஓம்காரம், சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனம் நடைபெற்றன. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடந்தது. சத்யசாய் பாபாவின் பிறந்த நாளான நேற்று முன்தினம் (நவம்., 23ல்) காலை, 6:00 மணிக்கு காயத்ரி மந்த்ர பாராயணம், காலை, 9:00 மணிக்கு ஸ்ரீ சந்தான கோபால ஹோமம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து காலை, 10:00 மணிக்கு அரசு மருத்துவமனையில் அன்று பிறந்த குழந்தைகளுக்கு புத்தாடை மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும்; மதியம், 12:00 மணிக்கு சிறப்பு நாராயண சேவை நிகழ்ச்சியும் நடைபெற்றன.தொடர்ந்து மாலை, 6:00 மணிக்கு ஸ்ரீ சத்யசாய் மிர்புரி இசைக்கல்லுாரி மாணவர்களின் ’சாய் கானாம்ருதம்’ என்ற தலைப்பில் பஜன் இசை நிகழ்ச்சி நடந்தது. பின்னர், இரவு, 8:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !