ஆலய விதிப்படி உருமாறுகிறது கக்கன்ஜி கிராம கோவில்!
குன்னூர், ஏப்.20-உபதலை கக்கன்ஜி நகரில் அமைந்துள்ள செல்லாண்டி அம்மன் கோவில் ஆலய விதிப்படி பிரம்மாண்டமாய் உருமாறி வருகிறது. குன்னூர் அருகே உபதலை கக்கன்ஜி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்; துவக்கத்தில், இங்குள்ள மக்கள் செல்லாண்டி அம்மனை குல தெய்வமாக வழிபட்டு வந்தனர்; சிறிய மணிக் கூண்டில் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டு வந்தனர். பின், 6 அடி உயரம் கொண்ட வளைவான மேடை அமைத்து ஒரு கல்லை செல்லாண்டி அம்மனாக பிரதிஷ்டை செய்து, சுமார் 20 ஆண்டுகளாக வழிபட்டு வந்தனர். ஆண்டு தோறும் கரக உற்வசம் ஆடம்பரமாக நடத்தப்பட்டு வருகிறது. வார பூஜை, விசேஷ பூஜைகளும் நடத்தப்படுகின்றன. இருப்பினும், இக்கோவில் பிற கோவில்களை போன்று கோபுரத்துடன், ஆலய விதிப்படி இல்லாதது, பக்தர்கள் மத்தியில் மனசங்கடத்தை ஏற்படுத்தியது; விளைவாக, கோவிலை கோபுரத்துடன், ஆலய விதிப்படி உருமாற்ற திட்டம் தயாரிக்கப்பட்டு, தற்போது பணிகள் நடந்து வருகின்றன. ஸ்ரீதர் தலைமையில், கோவில் கட்டுமானப் பணிக் குழு தலைவர் மாரிமுத்து, சரவணமூர்த்தி, ஜெகநாதன் மேற்பார்வையில் ஊர் மக்கள், இளைஞர்கள் ஒத்துழைப்புடன் கோவில் கட்டுமான பணி நடந்து வருகிறது. நிர்வாகத்தினர் கூறுகையில், "வெறும் 5,000 ரூபாயில் கட்டுமானப் பணியை துவக்கினோம்; பலரும், தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவு, நன்கொடையில் சுமார் 10 லட்சம் ரூபாய் செலவில் கருவறை, கோபுரம், 32 அடி உயரம் கொண்ட ராஜ கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. கோவில் திருப்பணிக்கு ஆன்மிகவாதிகள், பக்தர்களின் ஆதரவை வரவேற்கிறோம், என்றனர்.