உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மபுரி அனுமன் ஜெயந்தியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு

தர்மபுரி அனுமன் ஜெயந்தியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு

தர்மபுரி: அனுமன் ஜெயந்தியையொட்டி, ஆஞ்சநேயர் கோவில்களில், நேற்று  25 ம் தேதி சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து வழிபாடுகள் நடத்தப்பட்டன.

தர்மபுரி மாவட்டத்தில், அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. தர்மபுரி  எஸ்.வி., சாலை அபய ஆஞ்சநேயர் கோவிலில், சுவாமிக்கு, காலை, 5:00 மணிக்கு,  பால், பன்னீர், தயிர், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு  திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் நடத்தி, வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டு,  மஹா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் காலை முதலே நீண்ட  வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், மொடக் கேரி  ஆஞ்சநேயர் கோவில், முத்தம்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவில், தொப்பூர் மன்றோ  குளக்கரை ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில் உள்பட, மாவட்டத்தின் பல்வேறு  பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில், அனுமன் ஜெயந்தியை  முன்னிட்டு, நேற்று 25ம் தேதி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடந்தன.

* கிருஷ்ணகிரி காட்டுவீர ஆஞ்சநேயர் கோவிலில், ஆஞ்ச நேயருக்கு சிறப்பு  அபிஷேகம், அலங்காரம் நடந்தன. தங்கக் கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர்  பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி,  கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் ஏராளமானோர் சுவாமி தரிசனம்  செய்தனர். கிருஷ்ணகிரி பழையபேட்டை சீதாராம, வீர ஆஞ்சநேயர் சமேத  ராகவேந்திர சுவாமிகள் கோவிலில், வேத பாராயணமும், சுதர்ஷன ஹோமமும்  நடந்தன. வெள்ளிக்கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலித்தார்.  பழையபேட்டை லட்சுமி நாராயண சுவாமி கோவிலில், ஆஞ்சநேயர் திருவீதி  உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ராசுவீதி ராஜாராமர் மற்றும் அபய  ஆஞ்சநேயர் கோவிலில், ஹரிவாயுஸ்துதி பாராயணம் நடந்தது. கிருஷ்ணகிரி  அடுத்த கே.ஆர்.பி., அணைக்குன்று ஆஞ்சநேயர் கோவிலில், சுவாமிக்கு,  அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடந்தன. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்  செய்தனர்.

* ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய  பீடத்தில், நேற்று 25ம் தேதி அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி அனுமன் ஹோமம் நடந்தது. அனுமனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. முரளிதர சுவாமிகள் தலைமையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !