உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீநிவாஸ கல்யாண உத்ஸவப் பெருவிழா: பக்தர்கள் பரவசம்

ஸ்ரீநிவாஸ கல்யாண உத்ஸவப் பெருவிழா: பக்தர்கள் பரவசம்

கோவை: கோவையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாத்தியப்பட்ட, ஸ்ரீநிவாஸ கல்யாண உத்ஸவப் பெருவிழா, நேற்று கோலாகலமாக நடந்தது; ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர். கோவை, சூலுார், முத்துக்கவுண்டன்புதுார், திருச்செந்துாரான் தோட்டத்தில், பெரியசாமி – சாந்தி குடும்பத்தினர் சார்பில், ஏக கோடி ஸ்ரீ ஸூக்த மகா யாகம் கடந்த, 28ம் தேதி துவங்கியது. தொடர்ந்து நான்கு நாட்கள் குருபிரார்த்தனை, கோ, கஜ, அஸ்வ பூஜைகள், கும்பஸ்தாபனம் நடந்தன.

பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, வேத விற்பன்னர்கள், சாஸ்திரிகள், தீட்சை பெற்றவர்கள் மற்றும் சாக்தர்கள் உள்ளிட்ட, 1,500 பேர் பங்கேற்று பாராயணம், ஹோமம் செய்தனர். ரிக், யஜூர் வேத பாராயணங்கள், ஸ்ரீஸூக்த பாராயணம், லட்சுமி சஹஸ்ர கோடி நாம குங்குமார்ச்சனை, அஷ்ட லட்சுமி பூஜை, சுமங்கலி பூஜை மற்றும் தம்பதி பூஜைகள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து யாக மண்டபத்தில், நேற்று மாலை, ஸ்ரீநிவாஸ கல்யாண உத்ஸவப் பெருவிழா நடந்தது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாத்தியப்பட்ட விக்ரஹ மூர்த்தியான ஸ்ரீதேவி பூதேவி ஸமேத ஸ்ரீவெங்கடேஸ்வர பெருமாளுக்கு, கல்யாண உத்ஸவ வைபவம் நடந்தது. திருப்பதி ஏழுமலையான் கோவிலை சேர்ந்த வேத விற்பன்னர்கள் ஸ்ரீ தேவி, பூதேவி ஸமேத ஸ்ரீவெங்கடேஸ்வர பெருமாளுக்கு திருக்கல்யாண உத்ஸவத்தை முறைப்படி செய்து வைத்தனர்.

இதுகுறித்து தொழிலதிபர் பெரியசாமி கூறுகையில், ‘‘உலகில் உள்ள அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டிய யாகம் நடத்தப்பட்டது. கல்வி, தன, தான்ய விருத்தி, தீர்க்க ஆயுள் கிடைக்க ஏக கோடி மகா யாகம் நடத்தினோம். தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீநிவாஸ கல்யாண உத்ஸவ பெருவிழா நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பக்தர்கள் அதிகளவு பங்கேற்று பெருமாள் திருக்கல்யாண உத்சவத்தை கண்டு களித்தனர்,’’ என்றார். திருக்கல்யாண உற்சவத்தை காண கோவை மற்றும் சுற்று பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அருள் பெற்றனர். விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !