அழுத குழந்தையின் தொட்டிலை ஆட்டிய கோயில் காளை
மாண்டியா: கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் டனாயகனபுரா கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இப்பெண்ணுக்கு கைக்குழந்தை ஒன்றும் உள்ளது. இவருக்கு பேய் பிடித்துவிட்டதாக கிராமத்தினர் கூறி வந்தனர்.
இந்த பெண்ணை குணமாக்க ராம்நகர் மாவட்டம் காவானாபுரத்தை சேர்ந்த கோயில் காளையை புதன்கிழமை வரவழைத்தனர். கோவில் காளை வீட்டிற்கு வந்த நேரம் தொட்டிலில் படுத்திருந்த குழந்தை அழுதது. அழுகுரல் வந்த திசையை நோக்கிச் சென்ற காளை குழந்தை படுத்திருந்த அறைக்கு சென்று ஒரு நிமிடம் அப்படியே பார்த்தபடி இருந்தது. பின் தொட்டிலை தன் கொம்பினால் ஆட்டியது. இதனால் அழுகையை நிறுத்திய குழந்தை காளையை உற்றுப் பார்த்து விட்டு துாங்கிவிட்டது. அதன் பின் காளையின் முன் அப்பெண்ணை நிறுத்தினர். அந்த காளை பெண்ணிற்கு ஆசிர்வாதம் செய்தது. தற்போது பெண்ணிற்கு சரியாகிவிட்டதாக கிராமத்தினர் கூறுகின்றனர்.