உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆல்கொண்டமால் கோவில் தமிழர் திருநாள் திருவிழா: வரும் 16ல் துவக்கம்

ஆல்கொண்டமால் கோவில் தமிழர் திருநாள் திருவிழா: வரும் 16ல் துவக்கம்

உடுமலை: பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவில், தைப்பொங்கல், தமிழர் திருநாள் திருவிழா, வரும் 16ல் துவங்குகிறது.உடுமலை அருகேயுள்ள சோமவாரபட்டியில், கால்நடைகளை காக்கும் தெய்வமாகவும், வேளாண் வளம் செழிக்கவும், வேண்டியவருக்கு வேண்டியதை அருளும், ஆல்கொண்டமால் கோவில் உள்ளது.இக்கோவிலில், ஆண்டுத்திருவிழாவாக, தை பொங்கல் திருநாள் சிறப்பாக நடந்து வருகிறது.

மூன்று நாட்கள் நடக்கும் திருவிழாவிற்கு, உடுமலை, நெகமம், பொள்ளாச்சி உட்பட சுற்றுப்புற பகுதிகளிலிருந்து விவசாயிகள், பசுக்களின் பால் கொண்டு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனர்.மேலும், கால்நடை வளம் சிறக்கவும், கால்நடைகளை நோய் தாக்காமல் இருக்கவும், நேர்த்திக்கடனாகவும் உருவாரங்களை, சுவாமிக்கு வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.மேலும், தை பொங்கல் முதல் நாள் பிறக்கும் கன்றுகளை கோவிலுக்கு தானமாக வழங்குகின்றனர்.கிராமங்களில், அறுவடை திருநாளை வரவேற்கும் வகையில், மார்கழி மாதம் முழுவதும் இரவு நேரங்களில்,ஊருக்கு பொதுவாக உள்ள, சலகெருதுகளுடன் விளையாடி, தைபொங்கல் திருநாள் அன்று, மாலகோவிலுக்கு ஊர்வலமாகவும் அழைத்து வருகின்றனர்.திருவிழா கடைகள், ஒன்றிணைந்து வரும் கிராம மக்கள் என மூன்று நாட்கள் சிறப்பாக திருவிழா நடந்து வருகிறது.இந்தாண்டு திருவிழா, வரும் 16ம் தேதி, துவங்குகிறது. அன்று காலை, 5:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. பகல், 11:00 மணிக்கு, சிறப்பு பூஜையும், மாலை, 6:00 மணிக்கு, உழவர் திருநாள் சிறப்பு பூஜையும் நடக்கிறது.17ம் தேதி, காலை, 5:00 மணிக்கு, சிறப்பு அலங்காரம், தீபாராதனையும், பகல், 11:00க்கு, சிறப்பு பூஜையும் நடக்கிறது.

18ம் தேதி, அதிகாலை, 5:00 மணிக், சிறப்பு அலங்காரம், தீபாராதனை, மாலை, 6:00 மணிக்கு, மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், இரவு, 7:00 மணிக்கு, மகா தீபாராதனை, இரவு, 9:00 மணிக்கு, சுவாமி திருவீதி உலா, வாணவேடிக்கை, மகா தீபாராதனை நடக்கிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை, அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !