சபரிமலைக்கு பாத யாத்திரை: பக்தர்கள் அதிகம் ஆர்வம்
கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக வெளிமாநில ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு, பாத யாத்திரை செல்வது அதிகரித்து உள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டு பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கோவிலுக்கு பெண்களை செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சபரிமலைக்குச் சென்ற பெண்கள் திருப்பி அனுப்பபட்டனர்.
இது தொடர்பாக வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றபட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டை விட சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், எந்த ஆண்டும் இல்லாத வகையில், நடப்பாண்டு ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பாத யாத்திரையாக சபரிமலைக்கு செல்வதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டம், கர்நாடக பகுதிகளை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் கூடலூர், குருவாயூர் கோவில் வழியாக சபரிமலைக்கு பாதயாத்திரை செல்கின்றனர்.
இவர்களை, வனப்பகுதிகளில், எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தியுள்ளனர். வனத்துறையினர் கூறுகையில், வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள, கர்நாடக பந்திப்பூர், முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதி வழியாக வெளிமாநில ஐயப்ப பக்தர்கள் நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும், இரவில் யானைகள் நடமாட்டம் உள்ள, தமிழக கேரளா எல்லையான நாடுகாணி - வழிகடவு சாலையில், இரவு நேரங்களில் நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும் என, கூறினர்.