உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கேட்ட வரம் கிடைத்தது

கேட்ட வரம் கிடைத்தது

பிரபல எழுத்தாளரான காலம் சென்ற அநுத்தமா என்ற ராஜேஸ்வரி, காஞ்சி மகாசுவாமிகளின் பரம பக்தை. கணவரான பத்மநாபனை 12 வயதிலேயே கரம் பிடித்து புகுந்த வீட்டுக்கு வந்தவர். அவரது மாமனார் தன் மகளாகக் கருதி பாசம் காட்டினார். மருமகள் எழுதத் தொடங்கிய போது ஆதரவு கொடுத்தவர் மாமனார் தான். ‘அநுத்தமா’ என புனைப்பெயர் சூட்டியவரும் அவரே.  லலிதா சஹஸ்ர நாமத்தில் வரும் அம்பிகையின் ஆயிரம் திருநாமங்களில் அநுத்தமா என்பதும் ஒன்று.


மாமனாரிடம் கல்வி கற்ற அநுத்தமாவின் ஆங்கிலப் புலமை அபாரமானது. எழுத்தாளர் தி.ஜானகி ராமன் காலமான போது, சென்னை தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம் இரங்கல் கூட்டம் நடத்தியது. அதில் தி.ஜானகிராமனின் ரசிகர்களான  ஆங்கிலேயர்கள் சிலரும் பங்கேற்றனர். அப்போது சி.சு.செல்லப்பா, க.நா.சுப்பிரமணியம், தீபம் நா. பார்த்தசாரதி போன்ற எழுத்தாளர்கள் முன்னிலையில் தி.ஜானகிராமன் குறித்து அநுத்தமா ஆங்கிலத்தில் பேசினார்.
  பரமாச்சாரியாரின் பக்தரான கி.வா.ஜகந்நாதன், அநுத்தமாவைத் தன் தங்கை என்றே குறிப்பிடுவார். ஏராளமான நுால்களைக் கற்ற படிப்பாளியான மகாசுவாமிகள், தற்கால இலக்கியங்களையும் படிப்பதுண்டு. குறிப்பாக ஆன்மிகச் சிந்தனைகள் அடங்கிய படைப்புக்கள் படித்து மகிழ்வார்.
  ‘மணல் வீடு, நைந்த உள்ளம், தவம், நல்லதோர் வீணை, வேப்பமரத்துப் பங்களா, அங்கயற்கண்ணி’  என்னும் பல நாவல்களை எழுதி வாசகர்களின் பேரன்பைப் பெற்றவர் அநுத்தமா. அவரால் எழுதப்பட்ட ஒரு நாவல் மூலம் மகாசுவாமிகளின் மனதிலும் இடம் பிடித்தார். சுவாமிகளின் பாராட்டைப் பெற்ற அந்த நாவல் `கேட்டவரம்`. கேட்டவரம் பாளையம் என்னும் ஊரிலுள்ள பஜனை சம்பிரதாயம் பற்றிப் பேசும் படைப்பு அது.
  அநுத்தமாவை அழைத்து பாராட்டி ஆசியளித்தார் சுவாமிகள். அப்போது அவர் அடைந்த மனநிறைவுக்கு அளவில்லை. அவரது குடும்பத்தினருக்கும் மிகுந்த சந்தோஷம் தந்தது.

 தனக்கு அநாயாச மரணம் கிடைக்க வேண்டும் என சுவாமிகளிடம் பிரார்த்தித்து வந்தார் அநுத்தமா. சுவாமிகள் ஸித்தி அடைந்த பின்னர் அவரது திருவடியைச் சரணடைந்து வாழ்ந்தார்.


 2010 டிச.3 இரவு 8.44 மணி வரை பேசிக் கொண்டிருந்த அநுத்தமா, 8.45க்குக் காலமாகி விட்டார். ‘நல்ல ஆன்மாக்கள் கனிந்த பழம் மரத்திலிருந்து தானே நழுவி விழுவது மாதிரி மரணமடைவர்’ என மூதறிஞர் ராஜாஜி குறிப்பிட்டுள்ளார். அநுத்தமா வாழ்வில் அது உண்மையாயிற்று. கேட்டவரம் என்னும் நாவலுக்காக சுவாமிகளின் பாராட்டைப் பெற்ற அநுத்தமாவுக்கு அவர் கேட்ட வரம் கிடைத்தது நிஜம் தானே!    - திருப்பூர் கிருஷ்ணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !