உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்திரமேரூர் வட்டார கோவில்களுக்கு வரலாற்று ஆர்வலர்கள் நடைபயணம்

உத்திரமேரூர் வட்டார கோவில்களுக்கு வரலாற்று ஆர்வலர்கள் நடைபயணம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையம் மற்றும் ஐந்திணை காப்போம் குழுவைச் சேர்ந்த, 72 பேர், உத்திரமேரூர் மற்றும் திருமுக்கூடலில், மரபுநடை பயணம் மேற்கொண்டனர். ஐந்திணை காப்போம் என்ற குழுவினர், ஒவ்வொரு   ஆண்டும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஊருக்கு, மரபு நடை பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி இந்தாண்டு, ஐந்திணை காப்போம் குழுவினர் மற்றும் உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினர், 72 பேர், உத்திரமேரூர் மற்றும் திருமுக்கூடலுக்கு, நேற்று முன்தினம், பயணம் மேற்கொண்டனர். இதில், உத்திரமேரூரில், குடவோலை முறை தேர்தல் குறித்த கல்வெட்டு உள்ள வைகுண்ட பெருமாள் கோவில், கட்டடக்கலையின் சிறப்பை உணர்த்தும், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்றனர். இதையடுத்து, பல்லவர் கால கைலாசநாதர் மற்றும் பாலசுப்ரமணியர் கோவில், வடவாயிற் செல்வி என, கல்வெட்டுகளில் அழைக்கப்படும் துர்க்கையம்மன், கொற்றவை சிற்பங்களை பார்வையிட்டனர். நிறைவாக, திருமுக்கூடல் அப்பன் வெங்கடேச பெருமாள் கோவிலில் இயங்கிய, ‘ஆதுாரசாலை’ எனப்படும், மருத்துவமனை மற்றும் ஆயுர்வேத மருத்துவ குறிப்பை தெரிவிக்கும், வீரராஜேந்திர சோழன் கால கல்வெட்டை பார்வையிட்டனர். இதன் சிறப்புகளை, தொல்லியல் துறை அறிஞர் மதுசூதனன் விளக்கி கூறினார். உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் பாலாஜி மற்றும் ஐந்திணை காப்போம் குழு தலைவர் சண்முகப்பிரியன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !