புத்தூர் பகவதி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் கும்பபிஷேகம்-தாலப்பொலி திருவிழாவிற்கு இன்று கொடியேறியது.
இன்று காலை பூஜைகளுக்குப் பிறகு, 8.30 மணியளவில் தந்திரி அண்டலாடி உன்னி நம்பூதிரிப்பாடின் தலைமையில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு பரிகலசாபிஷேகம், பாணிகொட்டி பிரம்மகலசாபிஷேகம் மற்றும் 10.30 மணிக்கு பகவதி அம்மன் எழுந்தருளல் போன்ற முக்கியச் சடங்குகள் நடந்தது. மாலை 4 மணிக்கு கிரீஷ்குமாரின் ஆன்மீகச் சொற்பொழிவுடன் நடந்தது. மாலை 6.45 மணிக்கு கேரளா பாரம்பரிய கலையான கன்யார்களி நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று முதல் ஏப். 2ம் தேதி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு கேளி மற்றும் கூத்துமாடம் கொட்டிக்கயறல் நிகழ்ச்சிகளும், இரவு 10.30 மணிக்கு பாலப்புரம் சதானந்த புலவர் குழுவினரின் புகழ்பெற்ற தோல்பாவைக் கூத்து என்ற கோவில் கலை நிகழ்ச்சியும் நடைபெறும். வரும் நாட்களில் பல்வேறு சிறப்பு பூஜைகளும் கலாச்சார கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறவுள்ளன. திருவிழாவையொட்டி ஏப். 2 முதல் 6ம் தேதி வரை நடன மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. திருவிழா ஏப். 10ம் தேதி வெகுவிமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.