உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொம்மதேவியார் கோவிலில் மார்ச் 8ல் திருவிழா பக்தர்களுக்கு வனத்துறையினர் கட்டுப்பாடு

பொம்மதேவியார் கோவிலில் மார்ச் 8ல் திருவிழா பக்தர்களுக்கு வனத்துறையினர் கட்டுப்பாடு


செய்புளியம்பட்டி : தெங்குமரஹாடா வனப்பகுதி ஆதி கருவண்ணராயர் பொம்மதேவியார் கோவிலில், மார்ச்சில் மாசி மகம் திருவிழா நடக்கிறது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வனச்சரகம், தெங்குமரஹாடா வனப்பகுதி, கெஜஹட்டி கணவாய் மலையில் ஆதி கருவண்ணராயர் பொம்மதேவியார் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் மாசி பவுர்ணமி நாளில், இங்கு பொங்கல் விழா நடக்கிறது. அடர்ந்த வனப்பகுதியில் கோவில் உள்ளதால், பொங்கல் விழா நாளில் மட்டுமே, வனத்துறை அனுமதி வழங்குகிறது.
உப்பிலிய நாயக்கர் சமூகத்தின் குலதெய்வமாக உள்ளதால், தமிழகம் முழுவதிலும் உள்ள அவர்கள், குடும்பத்துடன் விழாவில் பங்கேற்பர்.
நடப்பாண்டு விழா மார்ச், 1ல் பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. மார்ச், 6ல் மாயாற்றிலிருந்து தீர்த்தக்குடம் எடுத்து வரப்படுகிறது. 8ம் தேதி காலை, பொங்கல் வைபவம் நடக்கிறது. அதை தொடர்ந்து கோவில் வளாகத்தில், ஆயிரக்கணக்கான ஆடுகளை பலியிட்டு, நேர்த்திக்கடன் செலுத்துவர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது: விழாவில் மது அருந்த அனுமதியில்லை. மாயாற்றில் முதலை நடமாட்டம் உள்ளதால், ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதிக்குள் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பதாக கருதப்படுவதால், வழக்கமாக வரும் பக்தர்கள், அறிமுகமில்லாத ஆட்களை அழைத்து வரக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !