உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெங்கடேசப் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண மஹோத்சவம்: திரளான பக்தர்கள் தரிசனம்

வெங்கடேசப் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண மஹோத்சவம்: திரளான பக்தர்கள் தரிசனம்

சேலம்: வெங்கடேசப் பெருமாள் கோவிலில் நடந்த திருக்கல்யாண மஹோத்சவத்தில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருக்கல்யாண மஹோத்சவ விழாவையொட்டி, சேலம், சின்னதிருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோவிலில், நேற்று முன்தினம் மாலை, வெங்கடேசப் பெருமாள், அலர்மேல் மங்கை தாயாருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. நேற்று காலை, தீர்த்தக்குளத்தில் திருமஞ்சனத்தை தொடர்ந்து, பெருமாள், அலர்மேல் மங்கை தாயாரை, கல்யாண அரங்கத்தில் எழுந்தருளச்செய்தனர். தொடர்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் ரெங்கமன்னார் சன்னதியிலிருந்து சூடிக்கொடுத்த சுடர்மாலை, குதிரையில், தாரை, தப்பட்டை முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து சூடப்பட்டது. தொடர்ந்து, பெருமாள் திருக்கல்யாண மஹோத்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை, தேவி, பூமாதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் திருவீதி உலா நடந்தது. இன்று மாலை, தீர்த்தக்குளத்தில் சக்கரத்தாழ்வார் திருமஞ்சனத்தை தொடர்ந்து, பவுர்ணமி தெப்போற்சவம், இரவில், 1,008 திருவிளக்கு பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !