உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் திருப்பணி படுமந்தம்: நடப்பாண்டு ஆடிப்பண்டிகையும் கேள்விக்குறி

மாரியம்மன் கோவில் திருப்பணி படுமந்தம்: நடப்பாண்டு ஆடிப்பண்டிகையும் கேள்விக்குறி

சேலம்: கோட்டை மாரியம்மன் கோவில் திருப்பணி படுமந்தமாக நடந்து வருவதால், நடப்பாண்டு ஆடிப்பண்டிகையும் கேள்விக்குறியாகியுள்ளது.
சேலம், கோட்டை மாரியம்மன் கோவில் திருப்பணி, 2015ல் தொடங்கியது. அதற்காக, கோவிலை இடிக்கும் பணி முடிந்த நிலையில், சிலர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கால், கட்டுமானப்பணியில் இடையூறு ஏற்பட்டு, 2018 வரை பணி நடக்கவில்லை. பின், பணி தொடங்கியபோது, பொருட்களின் விலையை காரணம்காட்டி, திட்ட மதிப்பீட்டை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு வழியாக, 2018 டிசம்பரில், திட்டமதிப்பீடு, 1.45 கோடி ரூபாயிலிருந்து, 2.50 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு, பணி தொடங்கியது. தற்போதைய நிலையில், கருவறையில் கல்மண்டபம் அமைக்கும் பணி, 50 சதவீதமே நிறைவடைந்துள்ளது. இதனால், பணி முடிய இன்னும் ஓராண்டாகும் என்பதால், தொடர்ந்து ஐந்தாமாண்டாக நடப்பாண்டும் ஆடிப்பண்டிகை பெயரளவுக்கு நடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து, கோவில் நிர்வாக அதிகாரி ராஜாராம் கூறியதாவது: இன்னும் ஒரு மாதத்தில் கருவறை கட்டட பணி நிறைவடையும். பின், வெளி பிரகார பணி தொடங்கும். கட்டட பணியில் தொய்வில்லை. வழக்கால் தான், பணி பாதிக்கப்பட்டது. தற்போது, துரிதகதியில்தான் நடக்கிறது. பணியை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !