உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீ ராமருக்கு விருந்து

ஸ்ரீ ராமருக்கு விருந்து

பரத்வாஜர் ராமனுக்கு விருந்து படைத்த கட்டத்தைப் பாட்டிகள் பாடும் விதமே அலாதியானது.

வைகுண்டவாசருக்கு வாழை இலை போட்டு
வாழை இலைதன்னை வடக்கே நுனி போட்டு
காட்டுச் சிறு கிழங்கும் கந்த மூலம் பழமும்
தூது விளங்காயுடனே சுண்டைக்காய் பச்சடியும்
அஞ்சு வகைப் பச்சடியும் ஆன நல்ல தாளிதமும்
பத்துவகைப் பச்சடியும் பால் குழம்பும் சர்க்கரையும்
பொறிச்ச பொறி கறியும் பொன்போல் சிறு பருப்பும்
புத்துருக்கு நெய்யும் புனுகு சம்பாப் பாயசமும்
தேங்காயும் சர்க்கரையும், தித்திக்க மோதகமும்
பச்சுன்னு கீரையும் பால் வடியும் மாவடுவும்
வேர்புறத்திலே வெடித்த வேண பலாச்சுளையும்
தார் பழுத்துச் செறிந்த தேனான கதலிகளும்
கொத்தோடு மாம்பழமும் கொம்பிலுள்ள நல்தேனும்
கொய்யாப் பழங்களும் கொடி முந்திரிப் பழமும்
கிச்சிலிப் பழங்களும் கிளுகிளுத்த மாதுளையும்
வெள்ளைக் கடுக்காயும் வெடுக்குன்னு இஞ்சியும்
பச்சை மிளகும் பால் வழியும் களாக்காயும்
நேர்த்தியாய் நெல்லிக்காய் மணமுள்ள மாகாளி
நார்த்தை கடநார்த்தை நறுமண எலுமிச்சை
கடுகு மாங்காயும் கார மிளகாயும்

இப்படி முற்றிலும் அடுக்களைப் பெண்களாகப் பாட்டுச் செய்தவர்கள், போஜனம் முடித்த ராமன், காலும் அலம்பி கனிவாயும் கொப்புளிச்சு ஆசமனம் பண்ணி அவருமங்கே வீற்றிருந்தார் எனும் போது கவிகளாகவும், சாஸ்திர ஆசார சீலைகளாகவும் ஆகி விடுகின்றனர். கையலம்பி வந்ததும் ஜீர்ணம் ஆவதற்காக, ஏலமுடன் சுக்கு எல்லார்க்கும் தாம் கொடுத்தார் என்று மறக்காமல் சொல்வதை, பாட்டிமார் பாஷையிலேயே, பொகு அழகு என்று சிலாகிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !