வெளியே வராதீர்... எமலோகம் ஹவுஸ் புல்!
அவிநாசி : அவிநாசி போக்குவரத்து போலீசாரின், வித்தியாசமான, கொரோனா விழிப்புணர்வு பேனர், வாகன ஓட்டிகளை யோசிக்க வைத்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க, பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரக்கூடாது என்ற விழிப்புணர்வு, தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், மக்கள் நடமாட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்துவது என்பது, சிரமமான காரியமாகவே உள்ளது. ஏதாவது ஒரு காரணம் சொல்லி, ரோடுகளில் மக்கள் நடமாடுகின்றனர்.
அவிநாசி உட்கோட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில், நகரின் பிரதான இடங்களில், வித்தியாசமான வாசகம் அடங்கிய பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில், விழித்திரு...- விலகி இரு...- வீட்டில் இரு! என்ற தலைப்பில் அச்சிடப்பட்டுள்ள பேனரில்,வீட்டில் இருக்க எனக்கு போரடிக்கிறது என கூறியபடி, தம்பதியர், டூவீலரில் பயணிப்பது போன்றும், வெளியில் வா, எனக்கும் போரடிக்கிறது என, எமதர்மன் அழைப்பது போன்றும் வாசகம் அச்சிடப்பட்டுள்ளது. மற்றொரு பேனரில், ஹவுஸ்புல், எமலோகத்தில் இடமில்லை. தயவு செய்து யாரும், வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எமதர்மன் சொல்வது போல அச்சிடப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு பேனர்கள் பொது மக்களை சிந்திக்க வைக்கிறது. போக்குவரத்து போலீசார் கூறுகையில், பல வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், ஒரு சிலர் திருந்தவில்லை. அவர்களுக்காகவே, எமதர்மன் அழைப்பது போல், படத்துடன் பேனர் வைத்துள்ளோம். இதை பார்த்தாவது, விழிப்புணர்வு வந்தால் சரிதான் என்றனர்.