உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அர்ச்சகர்களுக்கு நிவாரணம் அளிக்க முதன்மை செயலர் உத்தரவு

அர்ச்சகர்களுக்கு நிவாரணம் அளிக்க முதன்மை செயலர் உத்தரவு

திருப்பூர்: ஒருகால பூஜை திட்டத்தில் உள்ள கோவில் பூஜாரிகளுக்கு, கடன் வாங்கியாவது, கொரோனா நிவாரணம் வழங்க வேண்டுமென, முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், கோவில் பூஜாரிகள், அர்ச்சகர்கள், பட்டாச்சார்யார்கள், வருவாய் இழந்து தவிக்கின்றனர். எனவே, அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் பூஜாரிகள், அர்ச்சகர், பட்டாச்சார்யார்களுக்கு, தலா, 1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.செயல் அலுவலரின் கட்டுப்பாட்டில் இல்லாத,ஒரு கால பூஜை திட்டத்தில் உதவிபெற்ற கோவில் பூஜாரிகளுக்கும், நிவாரணம் வழங்க, இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு முதன்மை செயலர் பனீந்திரரெட்டி, அறநிலையத்துறை இணை கமிஷனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:ஒருகால பூஜை திட்டத்தில் உள்ள கோவில்களில்பூஜை செய்து வரும், 8,340 பூஜாரிகளுக்கு, கொரோனா நிவாரணம் கிடைக்கவில்லை. எனவே, வருவாய் இழந்து தவிக்கும், பூஜை திட்ட கோவில் பூஜாரிகளுக்கும், கொரோனா நிவாரணமாக, ரூ.1,000 வழங்கப்பட வேண்டும். உதவி கமிஷனர்கள், இப்பணியை மேற்கொள்ள வேண்டும். எனவே, கமிஷனர் பொது நிதியில் இருந்தோ, நிதி வசதியுள்ள பெரிய கோவில்களில் இருந்து கடனாக பெற்றோ, ஒரு காலபூஜை கோவில் பூஜாரிகளுக்கு, நிவாரணம் வழங்க வேண்டும். பிற திட்டங்களில் நிவாரண உதவி பெறாத, ஒருகால பூஜை திட்ட கோவில் பூஜாரிகளுக்கு, ஓரிரு நாட்களுக்குள், 1,000 ரூபாய் நிவாரண உதவி வழங்கி, அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !