உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைதீஸ்வரன் கோயிலில் செல்வ முத்துக்குமார சுவாமிக்கு அபிஷேகம்

வைதீஸ்வரன் கோயிலில் செல்வ முத்துக்குமார சுவாமிக்கு அபிஷேகம்

வைதீஸ்வரன் கோவில்: வைத்தியநாத சுவாமி கோயில் செல்வ முத்துக்குமார சுவாமிக்கு கார்த்திகை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் தருமபுர ஆதீன குருமகா சந்நிதானம் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோயில் தையல்நாயகி சமேத வைத்தியநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் செல்வ முத்துக்குமார சுவாமி, நவ கிரகங்களில் செவ்வாய் பகவான் மற்றும் தன்வந்திரி சித்தர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். சுவாமி வைத்தியராக எழுந்தருளியுள்ள இக்கோவிலில் உள்ள தீர்த்தத்தில் நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டு, இங்கு வழங்கப்படும் திருச்சாந்துருண்டை யை உட்கொண்டால் 4448 வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்புமிக்க வைத்தியநாதசுவாமி கோயிலில் மாதம்தோறும் கார்த்திகை நாளன்று வள்ளி, தேவசேனா சமேத செல்வ முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். சித்திரை மாத கார்த்திகை திருநாளான இன்று வள்ளி தேவசேனா சமேத செல்வ முத்துக்குமார சுவாமியை அபிஷேக மண்டபத்தில் எழுந்தருளச் செய்து திரவிய பொடிகள், பால், சர்க்கரை, தேன், பஞ்சாமிர்தம், பழங்கள், தயிர், இளநீர், பன்னீர் மற்றும் விபூதி கொண்டு சிறப்பு அபிஷேகமும், சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனையும் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. ரமேஷ் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த அபிஷேக, ஆராதனையில் தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்கள் விடுபட வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தினார். கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வரவில்லை. கார்த்திகைப் வழிபாட்டில் தருமபுரம் ஆதீன திருமடம் மற்றும் கோயில் சிப்பந்திகள் மட்டும் கலந்துகொண்டு சமூக இடைவெளி விட்டு நின்று செல்வ முத்துக்குமார சுவாமியை தரிசனம் செய்தனர். முன்னதாக கோயில் சிப்பந்திகள் அனைவருக்கும் தருமபுர ஆதீனம் குருமகாசன்னிதானம் கபசுர குடிநீர் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !