உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் ஆனி திருமஞ்சன விழா: ஆன்லைனில் ஒளிபரப்பு

அருணாசலேஸ்வரர் ஆனி திருமஞ்சன விழா: ஆன்லைனில் ஒளிபரப்பு

திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று நடந்த, ஆனி திருமஞ்சன விழா, ஆன்லைனில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தை முதல் ஆனி மாதம் வரையிலான ஆறு மாதங்கள், உத்திராயண புண்ணிய காலம் என அழைக்கப்படுகிறது. இதில், ஆனி உத்திர நட்சத்திரத்தின்போது, திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில், சிவகாமி சமேத நடராஜருக்கு, ஆனி திருமஞ்சன சிறப்பு அபிஷேகம் நடக்கும்.

நடப்பாண்டு, கொரோனா ஊரடங்கால், பக்தர்கள் அனுமதிக்கப்படாமல், கோவில் இரண்டாம் பிரகாரத்தில், சிவகாமி சமேத நடராஜர் எழுந்தருளினர். ஆனி திருமஞ்சன விழா, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. பக்தர்கள் காணும் வகையில், ஆன்லைனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.சிதம்பரம்கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றம், 19ம் தேதி துவங்கியது.தேர் மற்றும் தரிசன விழாவில், 150 தீட்சிதர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், இரண்டு தீட்சிதர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், விழாவை நடத்த, ௨௫ தீட்சிதர்களுக்கு மட்டும், மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.நேற்று அதிகாலை, 3:௦௦ மணிக்கு அபிஷேகம் துவங்கியது. வழக்கமாக, நடராஜருக்கு, 5,௦௦௦ லிட்டர் பால் அபிஷேகம் நடக்கும். நேற்று, 500 லிட்டர் பாலில் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மகா தீபாராதனை நடந்தது.மாலை, 4:15 மணிக்கு, ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து, நடராஜரும், சிவகாமசுந்தரியும் நடனமாடியபடியே சித்ரசபைக்கு சென்றனர். அங்கு, ஆனி திருமஞ்சன விழா நடந்தது. பக்தர்கள் இன்றி, விழா எளிமையாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !