பயம் போக்கும் நிமிஷாம்பாள்
பக்தர்களின் கோரிக்கையை கணப் பொழுதிற்குள் நிறைவேற்றும் நிமிஷாம்பாள், கர்நாடக மாநிலம் கஞ்சாம் என்னும் தலத்தில் அருள்புரிகிறாள். மனதில் நினைத்தாலே பயமில்லாத வாழ்வு அளிக்கும் அம்பிகை இவள்.
லலிதா சகஸ்ர நாமத்தில் 281வது நாமாவாக ‘ஒன்னுமேஷ நிமிஷோத்பன்ன விபன்ன புவனாவல்லே நம:’ என நிமிஷாம்பாள் போற்றப்படுகிறாள். வைகாசி வளர்பிறை தசமியன்று நிமிஷாம்பாள் ஜெயந்தி நடக்கும். அன்று 108 கலசாபிஷேகம், துர்கா ஹோமம் நடக்கும். ‘கிருஷ்ண சிலா’ என்னும் கருமை நிறத்துடன் சூலம், உடுக்கை தாங்கி கிழக்கு நோக்கியிருக்கிறாள். தலை மீது தர்மச் சக்கரமே குடையாக உள்ளது. மன்னர் மும்முடி கிருஷ்ணராஜ உடையார் காலத்தில் அம்மனின் முன் சக்கரப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தினமும் மூன்று கால பூஜை நடக்கிறது.
பவுர்ணமியன்று பக்தர்கள் விரதமிருந்து அம்மனைத் தரிசிக்கின்றனர். திருமணத் தடை, எதிரிபயம் நீங்கவும், குழந்தை பாக்கியம், வழக்கில் வெற்றி பெறவும் விரதம் அனுஷ்டிக்கின்றனர். துர்க்கையின் அம்சமாக நிமிஷாம்பாள் இருப்பதால் ராகுகாலம், அஷ்டமியன்று பால் அபிஷேகம் நடக்கிறது. கோயில் வாசலில் ஓடும் காவிரி நதிக்கரையில் விநாயகர் சன்னதி உள்ளது.
விநாயகர், சிவன், பார்வதி, சூரியன், விஷ்ணு ஆகிய ஐந்து தெய்வங்களையும் இணைத்து சனாதன தர்மத்தை ஆதிசங்கரர் ஏற்படுத்தினார். அதைப் பிரதிபலிக்கும் விதமாக இங்கு ஐந்து சன்னதிகள் உள்ளன. சூரியன், அனுமன் சன்னதிகள் மேற்கு நோக்கி உள்ளன. கேரள பாணியில் அர்ச்சகர்கள் அமர்ந்தபடி பூஜை நடத்துகின்றனர். எல்லா சன்னதியிலும் பக்தர்களுக்கு தீர்த்தம் தரப்படுகிறது.
விசேஷ நாட்கள்: நிமிஷாம்பாள் ஜெயந்தி, மாத பவுர்ணமி, நவராத்திரி