உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகரை வழிபடுவோம்; கொரோனாவை விரட்டுவோம்!

விநாயகரை வழிபடுவோம்; கொரோனாவை விரட்டுவோம்!

திருப்பூர் : கொரோனா தொற்றில் இருந்து உலக மக்களை காக்க வேண்டி, கொரோனா விநாயகர் சிலைகளுடன், சதுர்த்தி விழாவை கொண்டாட, இந்து முன்னணி தயாராகி வருகிறது.

இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா, கொண்டாடப்படுகிறது. விழுப்புரத்தில் இருந்து வரும் சிற்ப கலைஞர்கள், மரக்குச்சி, கிழங்கு மாவு, கல்மாவு போன்ற, இயற்றையான பொருட்களை கொண்டு சிலை வடிவமைக்கின்றனர்.விநாயகப்பெருமான், இடதுகாலை கொரோனா அரக்கன்மீது ஊன்றி, சூலாயுதத்தால் அரக்கனை வதம் செய்வது போல், சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் குமார் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும், 1.50 லட்சம் சிலைகள் வைக்க திட்டமிட்டுள்ளோம்.

சமூக இடைவெளி மற்றும் கொரோனா தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றி, சிலை வழிபாடு நடக்கும்.பொதுக்கூட்டம், ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிளேக், மலேரியா போன்ற தொற்று நோய் பரவிய காலத்தில், இந்தியா முழுவதும் அம்மனை வழிபட்டு, பரிகாரம் தேடினர். கொரோனா எனும் அரக்கனை விரட்டியடிக்க, இறைவனை சரணடைந்து, பாதம் பற்றி மனம் உருக வழிபட வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி, ஆக., 22ல் சதுர்த்தி விழா கொண்டாடப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !