தென்காசி பகுதி கோயில்களில் குரு பெயர்ச்சி வழிபாடு!
தென்காசி : தென்காசி பகுதி கோயில்களில் இன்று (17ம் தேதி) குரு பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடக்கிறது. குருபகவான் இன்று (17ம் தேதி) மாலையில் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பிரவேசம் செய்கிறார். இதனை முன்னிட்டு தட்சிணாமூர்த்தி கோயில்களில் இன்று குரு பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடக்கிறது. தென்காசி ஆயிரப்பேரி ரோடு தட்சிணாமூர்த்தி சைவ சித்தாந்த மடாலயத்தில் இன்று மாலையில் சிறப்பு அபிஷேகங்கள் நடக்கிறது. நாளை (18ம் தேதி) காலையில் கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு அர்ச்சனைகள், மாலையில் புஷ்பாஞ்சலி, இரவு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. மேலும் ஒவ்வொரு வியாழன் அன்று காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் சிறப்பு அபிஷேக, பூஜை நடக்கிறது.
தென்காசி செங்கோட்டை ரோடு யோக தட்சிணாமூர்த்தி கோயிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு இன்று கோடி மந்திரங்கள் ஜெபித்து, சிறப்பு பூஜை வழிபாடு நடக்கிறது. தென்காசி உலகம்மன் உடனுறை காசிவிசுவநாதர் கோயிலில் தட்சிணாமூர்த்தி சன்னதி, மேல சங்கரன்கோவில் தட்சிணாமூர்த்தி சன்னதியில் குரு பெயர்ச்சி சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை மற்றும் பூஜை வழிபாடு நடக்கிறது.
ஆய்க்குடி காளகண்டேஸ்வரர் உடனுறை சவுந்தர்ய நாயகி அம்மன் கோயில் தட்சிணாமூர்த்தி சன்னதி மற்றும் கம்பிளி மகா கணபதி பேச்சியம்மாள் சமேத தட்சிணாமூர்த்தி கோயிலில் இன்று மாலையில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை வழிபாடு நடக்கிறது. புளியரை தட்சிணாமூர்த்தி கோயிலில் இன்று காலையில் கணபதி ஹோமம், தேவாரம் இன்னிசை, மதியம் பஜனை, சிறப்பு அபிஷேகம், ருத்ர ஏகாதசி, ஜெபம், ஹோமம், மாலையில் நாதஸ்வர கச்சேரி, சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடக்கிறது.