உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னி: வேண்டாமே தயக்கம்

கன்னி: வேண்டாமே தயக்கம்

ராகு கேது பெயர்ச்சியால் புதிய மாற்றம் காண்பீர்கள்.  கவுரவத்துடன் வாழ நினைப்பீர்கள். 10ம் இடத்தில் இருந்த ராகு 9ம் இடத்திற்கு மாறுவது முன்னேற்றம் தரும். பொதுநலனில் அக்கறை கொண்டவர்களும் ராகுவால் சேவை மூலம் ஆதாயம் கிட்டுமா என கணக்கிடுவர். அரசியல்வாதிகள் வளர்ச்சியடைவர். ஏதேனும் புதிய வழியில் பொருள் சேருமா என்ற  ஆசை மனதில் துளிர் விடும்.  அலைபாயும் மனதை அடக்குவது அவசியம்.  அக்டோபரில் குருபார்வை ராசி மீது விழுவதால் மனதில் தெளிவு பிறக்கும். அந்த நேரத்தில் ஆன்மிக ஈடுபாடு கொண்டவர்களுக்கு தக்க குருநாதர் கிடைப்பார். மூன்றில் இணையும் கேது பயத்தை ஏற்படுத்துவார். நீண்ட யோசனைக்குப் பிறகு முயற்சியில் ஈடுபடுவீர்கள். வீண்பயத்தால் வெற்றி தாமதமாகும்.  மொத்தத்தில் தயக்கத்தை  கைவிட்டால் வானம் கூட வசமாகும்.

குடும்பம்: பெற்றோரின் உடல்நிலையில் கவனம் தேவை. விட்டுப்போன பிதுர்கர்மாவை முடிக்கும் வாய்ப்பு கிடைக்கும். கேதுவால் சகோதர வழியில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். நெருங்கிய உறவினர்கள் உங்களைக் கண்டு  பொறாமைப்படுவர். எதிரி பிரச்னை, திருஷ்டி தோஷத்தால் கவலை உண்டாகும். கூட இருந்தே குழி பறிப்பவரிடம் எச்சரிக்கை தேவை. குடும்பப் பெரியவர்களின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள்.  

நிதி நிலை : நிலம், வீட்டு மனை வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்து ராகுவால் வந்து சேரும். பாக்யாதிபதி சுக்கிரன் ஒன்பதாம் இடத்தில் ராகுவோடு இணையும் காலத்தில் சிறப்பான ஆதாயம் கிடைக்கும். ஷேர் மார்க்கெட் முதலீட்டால் லாபம் காண்பீர்கள். சேமிப்பில் ஈடுபடுவீர்கள்.

பெண்கள்: குடும்ப பிரச்னையில் கணவரின் உதவி கிடைக்கும்.  ஆயினும் அவருடன் கருத்து வேறுபாடு வரலாம்.  பிள்ளைகளின் நலனுக்காக சேமிப்பில் ஈடுபடுவீர்கள். வீட்டுப் பெரியவர்களிடம் நற்பெயர் காண்பீர்கள். கவுரவம் காரணமாக வீட்டு பிரச்னையை வெளியில் சொல்ல மாட்டீர்கள்.

மாணவர்கள்: கல்வியில் ஏற்றம் பெறும் காலம். ஞாபக மறதியால் பாதிப்பு ஏற்படாது. ஜாதகத்தில் நல்ல திசை இருந்தால் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறுவீர்கள். அக்கவுண்டன்சி, காமர்ஸ், எகனாமிக்ஸ், ஜர்னலிஸம் படிப்பவர்கள் சாதனை படைப்பர்.. ஆன்லைன் வகுப்பில் நெட்ஒர்க் பிரச்னையால் அவதிப்பட வாய்ய்புண்டு.

உடல்நலம்:  உஷ்ண உபாதையால் பாதிக்கப்படலாம். முகத்தில் கட்டி, கொப்புளம் வரலாம். கேதுவால்  காது, மூக்குத் தொண்டை, நுரையீரல் சார்ந்த பிரச்னை ஏற்படலாம். சிலர் அஜீரணக் கோளாறால் அவதிப்படுவர். உணவில் பெருங்காயம் சேர்த்துக் கொள்வது நன்மை தரும். உடலில் சர்க்கரைமற்றும் கொலஸ்ட்ரால் அளவை அவ்வப்போது பரிசோது அவசியம்.

தொழில்: பணிகாரணமாக செய்யும் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். ஐ.டி. துறையினர் எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். வியாபாரிகள் தொழிலை விரிவாக்க அலைய வேண்டியிருக்கும். என்றாலும் லாபம் என்பது சீரான முறையில் வரும். குறுதொழில், உணவு பண்டம், பழம், காய்கறி, பலசரக்கு, மெடிக்கல்ஸ் தொழிலில் வருமானம் உயரும். பணியாளர்கள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுத்தைச் சந்திப்பர். சிலர் பதவி உயர்விற்காக  உயர்கல்வியில் சேர முயல்வர். தகவல் தொடர்பு, வங்கி, அஞ்சலகம், இன்ஷ்யூரன்ஸ், பத்திரிகை துறையினர் வளர்ச்சி காண்பர். குறுக்கு வழி முன்னேற்றம் நிலைக்காது என்பதை உணர்வது  அவசியம்.

பரிகாரம்:
* அமாவாசையன்று அன்ன தானம்
* வியாழனன்று ஷீரடிபாபா வழிபாடு
* பஜனைசொற்பொழிவில் பங்கேற்றல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !