உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரத்தில் சிருங்கேரி சுவாமிக்கு ஜமாத் நிர்வாகிகள் வரவேற்பு!

ராமேஸ்வரத்தில் சிருங்கேரி சுவாமிக்கு ஜமாத் நிர்வாகிகள் வரவேற்பு!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் வந்த சிருங்கேரி பாரதீ தீர்த்த சுவாமிகளுக்கு, ஜமாத் நிர்வாகிகள் வரவேற்று மரியாதை செலுத்தினர். அங்கு வழங்கிய அருளுரையில், பக்தர்களிடம் பாரபட்சம் காட்டாதவர் கடவுள், என சுவாமிகள் கூறினார். ராமேஸ்வரத்திற்கு நேற்று மாலை வந்த இவருக்கு, ராமநாதசுவாமி கோயில் சார்பில் காட்டுப்பிள்ளையார் கோயில் அருகில் கோயில் இணைக்கமிஷனர் ஜெயராமன் தலைமையில் சிவாச்சாரியார்கள் கும்பமரியாதை செய்தும், ஊர் பொதுமக்கள் சார்பில் லெட்சுமண தீர்த்தம் அருகிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட சிருங்கேரி சுவாமிகள், கிழக்குரத வீதியிலுள்ள சங்கர மடத்திற்கு சென்றதை தொடர்ந்து, ராமேஸ்வரம் முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் ஜமாத் நிர்வாகிகள், பழம் சால்வை கொடுத்து வரவேற்று மரியாதை செய்தனர். பின் நடந்த பாதபூஜையை தொடர்ந்து சுவாமிகள் அருளாசி வழங்கி பேசியதாவது: ராமரின் கரத்தினால் ஈஸ்வரன் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜித்த தலமான ராமேஸ்வரம் நாட்டிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற ஷேத்திரம். இங்கு சிவன், விஷ்ணு என்ற வித்தியாசம் இல்லை. ஆதி சங்கரரின் சீடரான பத்மபாதர், ராமேஸ்வரம் யாத்திரையின்போது பக்தர்கள் ராமேஸ்வரம் ஸ்தலம் குறித்து கேட்டதற்கு, ராமனும், ஈஸ்வரனும் ஒன்று என்று கூறினார். அத்வைதிகளுக்கு ராமர், ஈஸ்வரன் என்ற வித்தியாசமில்லை. ராமேஸ்வரம்தான் சிருங்கேரியின் ஷேத்திரம். 1975 முதல் பலமுறை ராமேஸ்வரம் வந்துள்ளேன். நாம் எவ்வளவு முன்னேற்றம் கண்டாலும், பகவான் அனுக்கிரகம் எப்போதும் இருக்க வேண்டும். பகவான் பக்தர்களிடம் பாரபட்சம் காட்டமாட்டார். எப்போதும் பக்தியுடன் பகவானை பூஜிக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு கஷ்டம் இல்லாமல் சகலவிதமான நலன்களும் உண்டாகும். ராமேஸ்வரத்தில் தெற்கு கோபுரத்தை நிர்மாணம் செய்யும் காரியத்தை ஏற்றுக்கொண்டோம். கடவுளின் அனுக்கிரகத்தாலும், பக்தர்களின் உதவியினாலும் அக்காரியம் சிறப்பாக நடந்து வருகிறது. ராமேஸ்வரத்தில் மத ஒற்றுமை எப்போதும் நிலைத்து இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.பின்னர் ராமநாதசுவாமி கோயில் மூன்றாம் பிரகாரம் தெற்கு நெற்களஞ்சிய மூலையில் திருக்கல்யாண மேடையில் சந்திரமவுலீஸ்வரருக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சிருங்கேரி சுவாமி தரிசனம்: ராமநாதபுரம் அரண்மனைக்கு விஜயம் செய்த சிருங்கேரி பாரதீ தீர்த்த சுவாமி நேற்று பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். முன்னதாக, காலை 6.30 மணிக்கு அங்குள்ள ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்தார். இதை தொடர்ந்து தீர்த்த பிரசாதம் மற்றும் படி பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை 4 மணிக்கு மேல் சுவாமி, ராமேஸ்வரம் புறப்பட்டு சென்றார். இன்று காலை ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் கோபுர நிலைக்கு பூஜை செய்கிறார். அங்குள்ள சிருங்கேரி மடத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தந்து அருளாசி அளிக்கிறார். பின்னர் தனுஷ்கோடியில் சிறப்பு பூஜை செய்த பின் மாலையில் சிவகங்கை செல்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !