கோயிலில் தி.மு.க.,வினர் வழிபாடு: அன்னதானமும் வழங்கினர்
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், தி.மு.க.,வினர் கோவிலுக்கு சென்று, கொரோனா வைரஸ் ஒழிய வேண்டும் என, சிறப்பு வழிபாடு செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.தி.மு.க.,
தலைமை, ஹிந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்துகள் கூறுவதை புறக்கணிப்பதுடன், ஹிந்து மத நம்பிக்கைகளுக்கு எதிராக விமர்சனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது. தேர்தல் நேரத்தில், ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல என, கருத்தை சொல்லி பிரசாரம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.சமீப காலமாக, தி.மு.க.,வுக்கு எதிராக ஹிந்து அமைப்புகள் போர்க்கொடி துாக்கிஉள்ளன. இதை முறியடிக்க, தி.மு.க.,வினர், சமூக வலைதளங்களில் ஹிந்துக்களுக்கு ஆதரவான கட்சி போன்று தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், பொள்ளாச்சி தி.மு.க.,வினர் ஒரு படி மேலே சென்று, கோவிலில் வழிபாடு செய்து அன்னதானம் வினியோகித்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் குணமடைய வேண்டும் என வேண்டி, பொள்ளாச்சி தி.மு.க.,வினர், பழமை வாய்ந்த மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினர்.
தொற்று நீங்கி அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என வேண்டி, விபூதி உள்ளிட்ட பிரசாதங்களை வினியோகித்து, பக்தி மயமாக காட்சியளித்தனர். நெற்றி நிறைய விபூதி பூசி, கோவில் வளாகத்துக்கு முன், 250க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினர்.இதற்கான ஏற்பாடுகளை, நகர துணை செயலர், நாச்சிமுத்து செய்திருந்தார். மாவட்ட பிரதிநிதி அமுதபாரதி தலைமை வகித்தார். நகர துணை செயலாளர், கார்த்திக்கேயன், மாவட்ட பிரதிநிதி கண்ணன், மாவட்ட இலக்கிய அணி நிர்வாகி, ராஜபெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.