உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிலை ஒட்டி அசைவ உணவகம்; மந்தைவெளியில் பக்தர்கள் வேதனை

கோவிலை ஒட்டி அசைவ உணவகம்; மந்தைவெளியில் பக்தர்கள் வேதனை

 மந்தைவெளி : கோவிலை ஒட்டி, அசைவ ஓட்டல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது, பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, மந்தைவெளி சாலையில் உள்ள மார்க்கெட் பகுதியில், 150 ஆண்டு பழமை வாய்ந்த, தண்டு மாரியம்மன் கோவில் உள்ளது. அக்கோவிலை, மூன்றாவது தலைமுறையாக, ஜெயராமன் என்பவர்பூசாரியாக இருந்து, பராமரித்து வருகிறார். இந்நிலையில், கோவிலை ஒட்டி உள்ள கட்டடத்தில், எட்டு மாதங்களுக்கு முன், துரித உணவகம் மற்றும் பிரியாணி கடை திறக்கப்பட்டது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, மார்ச் முதல், கோவில்கள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், செப்., 1ம் தேதி, கோவில்களை திறக்க, அரசு அனுமதி அளித்தது.தொடர்ந்து, கோவிலை திறக்க வந்த பூசாரி ஜெயராமன், கோவிலை ஒட்டி கிடந்த, காலி மது பாட்டில்களை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இரவு நேரங்களில், அருகில் உள்ள அசைவ ஓட்டலுக்கு வருவோர், கோவில் அருகிலேயே குடித்து, மது பாட்டில்களை போட்டு செல்வது தெரிய வந்தது.இதனால் ஏற்பட்ட இடையூறு காரணமாக, கோவில் திறக்கப்படாது என, அறிவிப்பு பலகை வைத்து, கோவிலை பூசாரி பூட்டினார். இதையடுத்து, பக்தர்களிடையே எழுந்த எதிர்ப்பு காரணமாக, ஓட்டல் தற்காலிமாக மூடப்பட்டது. கடை மூடப்பட்டதை தொடர்ந்து, நேற்று முன்தினம் முதல், கோவில் திறக்கப்பட்டு, பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.இது குறித்து, மயிலாப்பூர் காவல் நிலையத்தில், ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில், புகார் அளிக்கப்பட்டது. போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரிக்கின்றனர். இது குறித்து பக்தர்கள் கூறுகையில், கோவில் அருகில், அசைவ கடை திறக்க அனுமதி கிடையாது என்ற விதி இருக்கும்போது, மாநகராட்சியினர் எப்படி அனுமதியளித்தனர்என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !