100 ஆண்டாக கோவில் கட்டாமல் தெய்வ வழிபாடுகள் செய்யாமல் வாழும் கிராம மக்கள்!
ஓசூர்: கோவில் கட்டினால் மரணம் நிச்சயம் என்ற பீதியால், கிராம மக்கள் 100 ஆண்டாக கோவில் கட்டாமலும், தெய்வ வழிபாடுகள் செய்யாமலும் உள்ளனர். கோவிலைப் பற்றிய பேச்சை எடுத்தாலே ஓட்டம் எடுக்கின்றனர்.ஓசூர் தாலுகா சூளகிரி அருகே எட்டுப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், 80 குடும்பத்தினர், 100 ஆண்டாக, பல தலைமுறையாக வசிக்கின்றனர். இக்கிராமத்தினர் பெரும் நில முதலாளிகளாகவும், வியாபாரிகளாகவும் உள்ளனர். ஊர் முழுவதும் பெரும்பாலும் காங்கிரீட் வீடு, பல அடுக்கு மாடி வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராம மக்கள் பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருந்தாலும், ஊரில் சாமி கும்பிடுவதற்கு, ஒரு கோவில் கூட கிடையாது.
கோவில் இல்லாத ஊரில் வசிக்கவும் கூடாது; பெண்ணை கட்டிக் கொடுக்கவும் கூடாது என்ற பழமொழியை தமிழகத்தில் முன்னோர்கள் கூறுவர். ஆனால், இந்த கிராமத்தில் வசதி இருந்தும் பல தலைமுறையாக சாமி கும்பிட, கோவில் கட்டுவதற்கு யாரும் முயற்சிக்கவில்லை. கோவில் கட்ட யார் முயற்சி செய்தாலும், அவர்களுக்கு மரணம் அல்லது ஏதாவது குடும்ப ரீதியாக பிரச்னைகள் ஏற்படுவதாலும், கோவில் கட்டுவதற்கு ஆர்வம் காட்டாமல் மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், அக்கிராமத்தைச் சேர்ந்தவர்களிடம் கோவில் குறித்த பேச்சை எடுத்தாலே, அவர்கள் ஓட்டம் பிடிக்கின்றனர்.இதுகுறித்து, பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது: கடந்த 100 ஆண்டில், கோவில் கட்ட பலர் முயற்சி செய்தனர். அவர்களில் சிலர் மரணம் அடைந்து விட்டனர். கடைசியாக, சங்கர் என்பவர் ஊருக்கு அருகே ஒரு கோவில் கட்ட முயற்சி செய்தார். அவரும் ஓசூர் அருகே பத்தலப்பள்ளியில் நடந்த சாலை விபத்தில் இறந்து விட்டார். அதனால், அந்த கிராம மக்கள், முக்கிய விழா காலங்களில் சாமி கும்பிட வேண்டுமென்றால், வெளியூர் கோவில்களுக்கு குடும்பத்தோடு செல்கின்றனர். பலர் வீடுகளிலே சாமி படத்தை வைத்து வணங்கி சாமி கும்பிடுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.எட்டுப்பட்டி கிராமவாசிகள் கூறியதாவது:எங்கள் ஊரில் அனைவரும் விவசாய வேலை செய்வதால், வேலை செய்வதற்கு நேரம் போதுமானதாக உள்ளது. அதனால், கோவில் கட்டுவதைப் பற்றி யாரும் சிந்திக்கவில்லை. கோவில் கட்டினால் இறப்பர் என்பதெல்லாம் வெறும் வதந்தி தான் என்றனர். கோவில் கட்ட முயற்சி எடுத்தாலே ஆளாளுக்கு நன்கொடை வழங்க முன்வரும் இந்த காலத்தில், கிரானைட் குவாரிகள், விவசாயத் தோட்டங்கள் நிறைந்த பெரும் பணக்காரர்களாக வசிக்கும் எட்டுப்பட்டி கிராமத்தில் கோவில் இல்லாதது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.