மேல்மலையனூர் கோவில் சுற்றுப்பகுதியில் கொளுத்தும் வெயிலில் பக்தர்கள் அவதி!
செஞ்சி: மேல்மலையனூரில் கோவில் சுற்றுப் பகுதியில் கொளுத்தும் வெயிலில் சிமென்ட் தரையில் நடக்க முடியாமல் பக்தர்கள் அவதியடைகின்றனர். பக்தர்கள் நடந்து செல்ல வசதியாக கார்பெட் அமைக்க வேண்டும். மேல்மலைனூர் அங்காளம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கில் வருகின்றனர்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மேல்மலையனூர் கோவிலின் சுற்றுப் பகுதிகள் அனைத்தும் மண் தரையாக இருந்தது. சில ஆண்டுகளில் படிப்படியாக கோவிலின் சுற்றுப் பகுதி முழுவதும் சிமென்ட் சாலை அமைத்து விட்டனர். கோவிலின் வடக்கு மற்றும் மேற்கு வாசல் பகுதியில் எல்லா இடங்களிலும் சிமென்ட் சாலை அமைத்து விட்டனர். கூட்ட நெரிசல் காரணமாக சில ஆண்டுகளாக பக்தர்களின் வாகனங்களையும் கோவில் அருகே அனுமதிப்பதில்லை. தொலைவிலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு வெறும் கால்களில் நடந்து வரும் பக்தர்கள் கொளுத்தும் வெயிலில் சிமென்ட் சாலையில் நடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.எனவே வடக்கு மற்றும் மேற்கு வாசல் பகுதியில் தேங்காய் நார்களை கொண்டு தயாரிக்கப்படும் கார்பெட்க்களை அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.