பஞ்சகல்யாணி திருக்கல்யாணம்: மழை வேண்டி வினோத வழிபாடு
பல்லடம்: பல்லடம் அருகே, மழை பெய்ய வேண்டி, பஞ்சகல்யாணி திருக்கல்யாணம் நடத்தி கிராம மக்கள் வினோத வழிபாடு மேற்கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த சாமிகவுண்டம்பாளையம் கிராமத்தில் மழை வேண்டி நேற்று வினோத வழிபாடு நடந்தது. பஞ்ச கல்யாணி என்று கூறப்படும் ஆண், பெண் கழுதைகளுக்கு திருமணம் நடந்தது. முன்னதாக, அலங்கரிக்கப்பட்ட கழுதைகள் ஊர்வலமாக விநாயகர் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டன. அங்கு, 101 தீபங்கள் ஏற்றப்பட்டு திருவிளக்கு வழிபாடு நடந்தது. காப்பு கட்டுதல், பெண் வீட்டார் அழைப்பு, நிச்சயதார்த்தம் ஆகியவற்றை தொடர்ந்து பஞ்சகல்யாணி திருக்கல்யாணம் நடந்தது. கிராம மக்கள் அனைவரும் மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர். இதையடுத்து அனைவருக்கும் கல்யாண விருந்து பரிமாறப்பட்டது.
கிராம மக்கள் கூறுகையில், "பல நூறு ஆண்டுக்கு முன் வாழ்ந்த தம்பதிகள் இருவரை கிராம மக்கள் சேர விடாமல் கழுதைக்கு இணையாக ஒப்பிட்டு கேவலப்படுத்தினர். ஆண்டவனிடம் வேண்டி தம்பதிகள் இருவரும் கழுதையாக மாறியதுடன், தங்களை அவமானப்படுத்தியதால், மழையின்றி வறட்சியால் கிராம மக்கள் அவதிப்பட வேண்டும் என சாபமிட்டனர். இதையடுத்து, கிராமம் வறட்சியிலும் பஞ்சத்திலும் மூழ்கியது. பின்நாளில், முனிவர் ஒருவரின் அறிவுறுத்தலின்படி கழுதையாக மாறிய தம்பதிகளை அழைத்து வந்து பரிகார பூஜைகளை செய்து திருமணம் நடத்தி வைத்தனர். கழுதையாக இருந்த இருவரும் மீண்டும் மனிதர்களாக ஆனதைத் தொடர்ந்து கிராமம் வறட்சியில் இருந்து மீண்டதாக வரலாறு கூறப்படுகிறது. இச்சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு 37 ஆண்டுக்கு முன் இதே பகுதியில் பஞ்சகல்யாணி திருக்கல்யாணம் நடந்தது. கல்யாணம் முடிந்த மறுநாளே மழை பெய்து குளம் குட்டைகள் நிறைந்தன. தற்போது மழை இன்றி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது இதனால் ஊர் மக்கள் இணைந்து மீண்டும் பஞ்சகல்யாணி திருக்கல்யாணம் நடத்த தீர்மானித்தோம் என்றனர்.