உத்தரகோசமங்கை கோயிலில் கிறிஸ்தவ திருமணம்; எதிர்ப்பால் அனுமதி மறுப்பு
உத்தரகோசமங்கை: கிறிஸ்தவ மத வாசகங்களுடன் பரிசுத்த விவாக அழைப்பிதழ் என அச்சிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி, மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் நவ.,4ல் திருமணம் நடக்கவிருந்தது. எதிர்ப்புகளால் அனுமதி மறுக்கப்பட்டது. கீழக்கரையை சேர்ந்த எஸ்.ரஞ்சிதா, எம்.முனியராஜுக்கு இக்கோயில் நடக்கவிருந்த திருமணத்திற்கு அச்சிடப்பட்ட அழைப்பிதழ் தான் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் கே.ராமமூர்த்தி கூறியதாவது: கிறிஸ்தவ பைபிள் வசனங்கள் அடங்கிய திருமண அழைப்பிதழில் உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் திருமணம் நடக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. எங்களின் எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தோம்.
இந்து மத சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு முரண்பாடாக உள்ளது. உடனடியாக அறநிலையத்துறையினர், சமஸ்தான நிர்வாகத்தினர் திருமணத்திற்கு அனுமதி மறுத்துள்ளனர். இது வரவேற்கதக்கது, என்றார். ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் கே.பழனிவேல் பாண்டியன் கூறியதாவது: திருமணத்திற்கான அழைப்பிதழில் சமஸ்தான நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறாமலேயே, திருமண வீட்டார்கள் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் திருமணம் நடப்பதாக அச்சிட்டுள்ளனர். இதுகுறித்து வந்த புகாரின் பேரில், கோயிலில் திருமணம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, என்றார்.