உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலின் ஒரு செங்கல்லைக்கூட அகற்றக்கூடாது: ஐகோர்ட்

கோயிலின் ஒரு செங்கல்லைக்கூட அகற்றக்கூடாது: ஐகோர்ட்

சென்னை : நிலுவையில் உள்ள வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை கோயிலின் ஒரு செங்கல்லை கூட அகற்றக்கூடாது என அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடும்படி சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.


சென்னை உயர் நீதிமன்றம் நியமித்த கோயில் புனரமைப்பு குழு தொடர்பான வழக்கு உள்ளிட்ட சில மனுக்கள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன .புனரமைப்பு குழு தொடர்பான வழக்கில் விரைவில் உத்தரவு பிறப்பிக்க போவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.


இவ்வழக்கு விசாரணையின் போது பழமைவாய்ந்த மூன்று கோயில்கள் இடிக்கப்பட்டு விட்டதாக ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தெரிவித்தார். மேலும் கரூர் மாவட்டத்தில் செல்லாண்டியம்மன் கோயிலை இடிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். உடனே அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் இதுகுறித்து அதிகாரிகளிடம் சரிபார்த்து தெரிவிக்கும்படி நீதிபதிகள் கூறினர். மேலும் இதுபோன்று எத்தனை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்றும் கேள்வி எழுப்பினர். அதற்கு அறநிலையத்துறை வழக்கறிஞர் வெங்கடேஷ் செல்லாண்டியம்மன் கோயிலை இடிக்க உத்தரவு எதும் பிறப்பிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக கூறினார். தொடர்ந்து நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை ஒரு செங்கல்லை கூட அகற்றக் கூடாது என இணை ஆணையர்கள், நிர்வாக அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். தங்களின் அறிவுறுத்தலை அறநிலையத்துறை ஆணையரிடம் அரசு வழக்கறிஞர் வெங்கடேஷ் தெரிவிக்கும்படி நீதிபதிகள் கூறினர். ஆணையரிடம் தெரிவிப்பதாக அரசு வழக்கறிஞரும் உறுதி அளித்தார். அறநிலையத்துறை சார்பில் எந்த அடிப்படையில் மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன; அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதா என்பதற்கும் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.விசாரணையை நவ., 18ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !