எட்டு மாதங்களுக்குப் பின் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு
மும்பை : மஹாராஷ்டிராவில், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், எட்டு மாதங்களுக்குப் பின், மத வழிபாட்டுத் தலங்கள் நேற்று திறக்கப்பட்டன.
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 17.5 லட்சத்தை கடந்துள்ளது. பலி எண்ணிக்கை, 45 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்நிலையில், மாநிலத்தில், கடந்த எட்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த மத வழிபாட்டுத் தலங்கள், நேற்று திறக்கப்பட்டன. பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவில், ஹாஜி அலி தர்கா, சீரடி சாய்பாபா கோவில், பண்டரிபுரம் பாண்டுரங்கன் கோவில் உள்ளிட்ட, பல கோவில்கள் திறக்கப்பட்டன.நேற்று அதிகாலை, கோவில்களில் நடை திறக்கப்பட்டதும், முக கவசம் அணிந்து வந்த பக்தர்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.மும்பை சித்தி விநாயகர் கோவிலில், ஒவ்வொரு நாளும், 1,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. சுவாமி தரிசனம் செய்ய, மொபைல் செயலி வாயிலாக, முன்பதிவு செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் உள்ளிட்ட, கொரோனாவால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்கள், கோவிலுக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.