கர்மவினையை போக்கும் முருகன் நாமம்
மதுரை, : மதுரையில் அனுஷத்தின் அனுகிரஹம் சார்பில் அனுஷ உற்ஸவத்தையொட்டி திருச்சி கல்யாணராமனின் சொற்பொழிவு வடக்கு மாசி வீதி தருமபுர ஆதினம் சொக்கநாதர் திருமண மண்டபத்தில் நடக்கிறது.
திருப்புகழில் இதிகாசம் என்ற தலைப்பில் நேற்று அவர் பேசியதாவது: அருணகிரிநாதர் 15ம் நுாற்றாண்டில் அவதரித்தவர். சனாதன தர்மமான ஹிந்து மதத்தில் 6 பிரிவுகள் உண்டு. அதில் முருகப்பெருமானை வழிபட்ட அருணகிரிநாதர், அவரை பற்றி பாடும் போது 6 பிரிவுகளிலும் இணைத்து பாடினார். பிள்ளையார் தம்பியே, மாவோன் மருமகனே, மன்றாடி மைந்தனே, உமை மைந்தனே என பேதம் கூடாது என்ற தத்துவத்தை தன் பாடல்கள் மூலம் அருணாகிரிநாதர் எடுத்துகாட்டினார்.நவக்கிரஹங்களுக்கு யாரும் பயப்படாதீர்கள். நாம் முன் செய்த கர்மவினை இருந்தாலும் முருகன் நாமம் அதை போக்கி விடும். இக்கால இளைஞர்கள் வாழ்க்கையில் எல்லா விஷயங்களுக்கும் பயப்படுகிறார்கள். வியாபாரம், திருமணம், கடன் தொல்லை என அஞ்சாதீர்கள். முருகப் பெருமானின் நாமாவை கூறி அவன் திருவடியை பற்றுங்கள், என்றார்.இன்று (நவ., 18) பட்டினத்தார் என்ற தலைப்பில் பேசுகிறார்.