அடிக்கிற கை தான் அணைக்கும் ..!
கடவுள் பற்றி விளக்கம் தருகிறார் புதுச்சேரி மகான் (அரவிந்தர்)
*சிறந்த நண்பர் கடவுள் மட்டுமே. நம்மை எப்போது அடிக்க வேண்டும், எப்போது அணைக்க வேண்டும் என்பதை அவர் மட்டுமே நன்குஅறிவார்.
*கடவுளின் அருளாட்சியில் தீமை என்பதே கிடையாது. நலத்தையோ அல்லது நலம் உண்டாக்கும் முயற்சியோ தான் எங்கும் நடந்து கொண்டிருக்கிறது.
*காலணி இல்லாமல் மிகக் கடினமான முள் பாதையிலும் நடந்து செல்லும் சக்தி, அன்பு என்னும் பாதத்திற்கு மட்டுமே இருக்கிறது.
*சோர்வு உங்களைச் சோர்வடையச் செய்துவிடக்கூடாது. அதிலிருந்து விலகி, அதன்காரணத்தைக் கண்டறியுங்கள். அதைப் போக்கும் முயற்சியில் இறங்குங்கள்.
*நேர்மை உங்களிடம் இருக்கும் வரை, செல்லும் வழியெல்லாம் கடவுள் துணைக்கு வருவதைக்கண்கூடாகக் காண்பீர்கள்.
*மனிதர்களை நேசித்து அவர்களுக்குத் தொண்டுசெய்யுங்கள். ஆனால், அவர்களின் பாராட்டுக்கு ஆசைப்படாமல் இருப்பதில் கவனமாக இருங்கள்.
*நல்ல லட்சியங்களுக்காக நாம் வாழவேண்டும். நற்பணிகளில் எப்போதும் ஈடுபட வேண்டும். இதற்காகவே மனித உடல் நமக்கு வழங்கப் பட்டிருக்கிறது.
*எவரையாவது ஏளனம் செய்யத் தோன்றினால், உங்களின் உள்ளத்தை உற்று நோக்குங்கள். உங்களிடமும் மடமைஎன்னும் குணம் இருப்பதைக் கண்டு, நீங்களே சிரித்துவிடுவீர்கள்.
*பிடிக்காத ஒரு விஷயத்தைக் கேட்க நேர்ந்தாலும், பொறுமையுடன் கேளுங்கள். ஆராய்ந்து பார்த்து அதிலுள்ள உண்மையைக்கண்டுபிடியுங்கள்.
*கடவுளின் கண்ணுக்கு அற்பமானது என்று எதுவும் கிடையாது. அதுபோல உங்களின் கண்ணுக்கும் அற்பமானது என்று எதுவும் இருக்கவேண்டாம்.
*வாழ்க்கைப் பயணத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், கடவுளின் நினைவோடு இருக்க வேண்டும்.
*உத்தம செயல்களைச் செய்ய விரும்பினால், அதை உடனடியாகச் செய்வதே சிறந்தது. பிறருக்கு சேவை செய்யும் பொதுநலத்துடன் வாழ்வதே உயர்ந்த வாழ்வாகும்.
*இன்பம் தரும் கற்பனைகளைவிட்டொழித்து கண்களைத் திறந்து பாருங்கள். உலகத்தையும் , உலகத்தைப் படைத்தகடவுளையும் உள்ளபடி உணர முற்படுங்கள்.
*பகைவர்கள் யாரும் நமக்குவெளியில் இல்லை. சுயநலம், கோழைத்தனம், பயம் போன்ற தீயஎண்ணங்கள் நமக்குள்ளேயே இருந்து நம்மை ஆட்டுவிப்பதை நன்றாகஉணருங்கள்.