பரமக்குடி சிவன் கோயில்களில் திருக்கார்த்திகை தீபம்
பரமக்குடி: பரமக்குடி மற்றும் நயினார்கோவில் பகுதிகளில் சிவன், முருகன் கோயில்களில் திருக்கார்த்திகை விழா கொண்டாடப்பட்டது. பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் நேற்று காலை தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம் நிறைவடைந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று இரவு 7:00 மணிக்கு ரிஷப வாகனத்தில் விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி வீதி வலம் வந்தார். அப்போது கோயில் முன்பு சொக்கப்பனை எரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பரமக்குடி தரைப் பாலம் அருகில் சுப்பிரமணிய சுவாமி கோயில், ஐந்து முனை ரோடு அருகில் மற்றும் பால்பண்ணை முருகன் கோயில், எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையார் கோயிலில் சொக்கப்பனை எரிக்கப்பட்டது. மேலும் நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயில் முன்பு நாக தீபம் ஏற்றப்பட்டது. இதனையொட்டி அனைத்து கோயில்களிலும், வீடுகளிலும் அகல் விளக்குகளை ஏற்றி பக்தர்கள், பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.