உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலைக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு தரிசன டோக்கன்!

திருமலைக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு தரிசன டோக்கன்!

திருப்பதி வெங்கடேசப் பெருமாளை தரிசிக்க, பாத யாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு, "திவ்ய தரிசனம் டோக்கன்களை, இனி குறிப்பிட்ட அளவு மட்டுமே வினியோகம் செய்ய, திருப்பதி தேவஸ்தானம் முடிவு மேற்கொண்டுள்ளது. திவ்ய தரிசனம் டோக்கன்களை வழங்குவதற்கு, திருப்பதியில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்ரீநிவாசம், விஷ்ணுநிவாசம் அலுவலக வளாகங்களில், புதிதாக, இரண்டு கவுன்டர்கள் திறக்கப்பட்டு, அடுத்த வாரம் முதல் அமல்படுத்த ஆலோசித்து வருவதாக, தேவஸ்தான நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம், துணை நிர்வாக அதிகாரி சீனிவாசராஜு ஆகியோர், திருமலையில் நிருபர்களிடம் தெரிவித்தனர். திருப்பதியிலிருந்து திருமலைக்கு வரும் பக்தர்களில், இனி, 22 ஆயிரம் பேருக்கு மட்டுமே, அன்றைய தினம் சுவாமி தரிசனம் செய்வதற்கான திவ்ய தரிசன டோக்கன் வழங்கப்படும். அதை விட, அதிகளவில் பக்தர்கள் வரும் நாட்களில், அடுத்த நாள் சாமி தரிசனம் செய்வதற்கான டோக்கன் வழங்கப்படும். இந்த டோக்கன்களில், திருமலையில் சுவாமி தரிசனம் செய்வதற்கான நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பதியில் இந்த டோக்கன்களை பெற்றுக் கொள்ளும் பக்தர்கள், திருப்பதியிலிருந்து திருமலைக்கு, பாத யாத்திரையாக செல்லும் வழியில், காளிகோபுரம் அருகே உள்ள தேவஸ்தான திவ்ய தரிசன டோக்கன் வினியோகம் செய்யும் கவுன்டரில், டோக்கனை காட்டினால், இங்குள்ள ஊழியர்கள் அதன் மீது முத்திரையிடுவார்கள்.

இந்த புதிய நடைமுறை மூலம், முன்னேற்பாடாக திருப்பதியில் டோக்கன் வழங்குவதால், திருமலைக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்கள், தகுந்த ஏற்பாட்டுடன் திருமலைக்கு வருவதற்கான அவகாசம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.தற்போது, தினமும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், பாத யாத்திரையாக வருவதால், அதிக அளவில் திவ்ய தரிசன டோக்கன்களை வழங்குவதால், சுவாமி தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்கள், அசவுகரியத்திற்கு உள்ளாகிறார்கள்.அதனால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறதே தவிர, பாத யாத்திரையாக வரும் பக்தர்களை கட்டுப்படுத்துவதற்கு அல்ல என்று, இந்த புதிய நடைமுறை குறித்து, அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.

இது சாத்தியமாகுமா?: திருமலைக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு, முக்கியத்துவம் கொடுத்து, அன்றைய தினமே சாமி தரிசனம் கிடைக்க வழி செய்யப்படுகிறது. இதனால், பக்தர்கள் பாத யாத்திரையாக வருவது அதிகரித்துள்ளது. அலிபிரி வழியாக வரும் பக்தர்கள், 2,000 படிகள் ஏறிய பிறகு, காளி கோபுரம் அருகேயும், ஸ்ரீவாரி மெட்டு வழியாக வருபவர்கள் 1,200 படி ஏறிய பிறகு தான், தரிசன டோக்கன் வழங்கப்படுகிறது.இவ்வாறு, தரிசன டோக்கன் பெற்றவர்கள், தொடர்ந்து நடந்து சென்று, திருமலையை நெருங்குவதற்கு, 300 படிகள் இருக்கும் போது, டோக்கன் முத்திரையிட்டு கொண்டால் தான், அது செல்லுபடியாகும். இதில், எவ்வித முறைகேடும் செய்ய முடியாத அளவிற்கு, நல்ல முறையில் சென்று கொண்டு இருக்கிறது. இந்த முறை மூலம், பக்தர்கள் பாத யாத்திரையாகத் தான் வருகிறார்களா என்பதை, தெளிவாக அறிந்து கொள்ள முடியும். இப்போது, இந்த முறையை மாற்றி, திருப்பதியிலேயே டோக்கன் வழங்கினால், பலர் இதை தவறாக பயன்படுத்துவதற்கு வழி ஏற்படும்.மேலும், பலர் ஆர்வத்தில் டோக்கன் வாங்கிவிட்டு, பாத யாத்திரையாக வராமல் போனால், உண்மையாக பாத யாத்திரை வரும் பக்தர்களுக்கு, வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். இதை தவிர்க்க, இப்போது நடைமுறையில் உள்ள ஏற்பாட்டின் மூலமே, கூட்டத்தை கட்டுப்படுத்தலாம். அலிபிரியிலும், ஸ்ரீவாரி மெட்டிலும் பாத யாத்திரை துவங்கும் இடத்திலேயே, அன்றைய நிலவரத்தை அறிவிப்பாக வெளியிடலாம். அல்லது திருப்பதியில் பாத யாத்திரை நிலவரத்தை அறிவிப்பாக வெளியிடலாம். இதை பார்த்து, பக்தர்கள் முடிவு எடுக்க வசதியாக இருக்கும். டோக்கன் வழங்குவதை, பாத யாத்திரை செல்லும் வழியில், இடைப்பட்ட இடத்தில் வழங்குவது தான் சரியாக இருக்கும், இல்லையெனில், இப்போதுள்ள நடைமுறையில், குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.எப்படியிருப்பினும், பாத யாத்திரை வரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் முன்னுரிமையை, எவ்விதத்திலும் குறைத்துவிடக் கூடாது என்பது, பலரது விருப்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !