ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் 4வது சோமவாரம்: பக்தர்கள் வழிபாடு
குளித்தலை: சோமவாரத்தை முன்னிட்டு, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். குளித்தலை அடுத்த, சத்தியமங்கலம் பஞ்., அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில், மலை உச்சியில் உள்ளது, 1,017 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். நேற்று, கார்த்திகை, 4வது சோமவார நிகழ்ச்சியில், மழையிலும் ஏராளமான பக்தர்கள் வந்தனர். பொன்னிடும் பாறை மலையடிவாரத்தில் தேங்காய், வாழைப்பழம் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் தங்கள் விவசாய நிலத்தில், பயிரிடப்பட்ட நெல், நிலக்கடலை, பருப்பு மற்றும் தானியங்களை பொன்னிடும் பாறையில் கொட்டி தரிசனம் செய்தனர். நங்கவரம் டவுன் பஞ்.,தமிழ்ச்சோலை கிராமத்தை சேர்ந்த சிவானந்தம் என்ற வாலிபர், உலக நன்மைக்காக, 11ம் ஆண்டாக படியில் உருண்டு சுவாமி தரிசனம் செய்தார். ஏற்பாடுகளை, செயல் அலுவலர் ராமமூர்த்தி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.