ஐயப்பன் கோவிலில் 18ம் படி திறப்பு: பக்தர்கள் தரிசனம்
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி ஐயப்பன் கோவிலில், 18ம் படி திறப்பு விழா, நேற்று வெகு விமரிசையாக நடந்தது. ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி, நேரு நகரில், சித்தி விநாயகர், தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு சபரிமலையில் உள்ளது போன்று, 18 படிகள் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் மார்கழி மாதம் முதல் சனிக்கிழமை,18ம் படி திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அதன்படி, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு,கணபதி ஹோமத்துடன் ஐயப்பனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. காலை, 6:00 மணிக்கு, 108 சங்காபிஷேகம், விசேஷ பூஜைகள் நடைபெற்றன. 7:00 மணிக்கு குருசாமி முன்னிலையில், 18ம் படி திறக்கப்பட்டது. ஐயப்ப பக்தர்கள், ’சுவாமியே சரணம் ஐயப்பா’ என்ற சரண கோஷத்தோடு, ஒவ்வொரு படியாக வணங்கி படியேறினர். தொடர்ந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஐயப்பனுக்கு அலங்கார பூஜை நடந்தது. இரவு, 18ம் படிக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு குத்துவிளக்குகள் ஏற்றி, பக்தர்கள் முன்னிலையில் படி பூஜை நடந்தது. ஹரிவராசனம் பாடலுடன், 18ம் படி நடை அடைக்கப்பட்டது.