ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வேடுபரி உற்சவம்
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் ராப்பத்து உற்சவத்தின் எட்டாம் நாள் விழாவான இன்று நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி (வேடுபரி) வையாளி கண்டருளல் நிகழ்ச்சி நடந்தது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த மாதம் 14ம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. சொர்க்கவாசல் திறப்புக்கு பின், கடந்த 25ம் தேதி ராப்பத்து உற்சவம் துவங்கியது. ராப்பத்து உற்சவத்தின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் திருக்கைத்தல சேவை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, மாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு பரமபதவாசலை கடந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 4.45 மணிக்கு திருமாமணி மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு மாலை 5 மணி முதல் மாலை 5.15 மணிவரை திருக்கைத்தல சேவை நடைபெற்றது. அப்போது உற்சவர் நம்பெருமாளை அர்ச்சகர்கள் கைகளில் ஏந்தி, எதிரில் நிற்கும் பக்தர்களுக்கும், பராங்குசநாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளி காத்திருக்கும் நம்மாழ்வாருக்கும் நன்கு தெரியும்படி காட்டினார்கள்.
ராப்பத்து உற்சவத்தின் 8ம் நாளான இன்று நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி (வேடுபரி) வையாளி கண்டருளல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வரும் 3ம் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது. 4ம் தேதி நம்மாழ்வார் மோட்ச நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.