பாடம் கற்பித்த முல்லா
ADDED :1735 days ago
பணக்காரர் ஒருவரின் வீட்டில் திருமணம் நடந்தது. விருந்து உண்ணும் போது பிரமுகர்கள் அரட்டை அடித்தனர். அதில் முல்லாவும் இருந்தார். பெரிய சாகசக்காரர்கள் என அவர்கள் தங்களுக்குள் தற்பெருமை பேசினர். முல்லாவிற்கு அவர்களின் பேச்சு பிடிக்கவில்லை.
‘‘நான் செய்த சாகசத்தை சொல்லட்டுமா’’ என்றார் முல்லா.
‘‘எங்கே...உங்களின் சாகசத்தை சொல்லுங்களேன் பார்க்கலாம்’’ என்றனர்.
‘‘காட்டிற்கு சென்ற போது கொள்ளைக்காரர்களை ஆட்டிப் படைத்தேன். நான் செல்லும் இடமெல்லாம் அவர்கள் நாய்களை போல் பின் தொடர்ந்தனர்.’’ என்றார் முல்லா.
‘‘ பெரிய விஷயம்தான். அப்படி என்ன செய்தீர்கள்?’’ எனக் கேட்டனர்.
‘‘அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. திருடர்களை கண்டதும் பயத்தில் ஓடினேன். என்னை துரத்திப் படிக்க அவர்களும் பின்தொடர்ந்தனர்’’ என்று சிரித்தார் முல்லா.