உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நயினார்கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி விழா

நயினார்கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி விழா

பரமக்குடி: பரமக்குடி மற்றும் நயினார்கோவில் பகுதிகளில் தைப்பூச தீர்த்தவாரி விழா நடந்தது. இதனையொட்டி வைகை ஆற்றில் இறங்கிய சுவாமியை தரிசிக்க பக்தர்கள் கூடினர்.

நயினார்கோவில் சவுந்தரநாயகி சமேத நாகநாதசுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச தீர்த்தவாரி உற்சவம் நடப்பது வழக்கம். இதன்படி நேற்று காலை 8:00 மணிக்கு சுவாமி, அம்பாள் கோயிலில் இருந்து புறப்பட்டு, அக்கிரமேசி கிராம எல்லையை அடைந்தார்.

அங்கு வைகை ஆற்றங்கரையில் குணநதீஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்து, வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி - அம்பாள் எழுந்தருளினர். பின்னர் பகல் 12:45 மணிக்கு சிறகிக்கோட்டை - மஞ்சக்கொல்லை வைகை ஆற்றில் இறங்கினார். அங்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்து சுவாமி தீர்த்தவாரி கண்டருளினார். அப்போது கிராம மக்கள் தங்கள் நிலங்களில் விளைந்த காய்கறிகளை சுவாமி இருந்த திசையில் அள்ளி வீசி படைத்தனர். இதனால் தொடர்ந்து தங்களது நிலங்களில் விளைச்சல் பெருகும் என்ற நம்பிக்கை தெரிவித்தனர். அப்போது பக்தர்களுக்கு நீர் மோர், மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் மாலை மீண்டும் சுவாமி புறப்பாடாகி இரவு 8:00 மணிக்கு கோயிலை அடைந்தார். சுற்றுவட்ட கிராம மக்கள் சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.

*பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி கோயிலில், நேற்று காலை 8:00 மணிக்கு பழநி ஆண்டவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பின்னர் பஞ்சமூர்த்திகள் சிம்மாசனத்தில் புறப்பாடாகி, சவுராஷ்டிர மேல் நிலைப் பள்ளி அருகில் உள்ள குமரசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி வீதிவலம் வந்து கோயிலை அடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !